6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தேதி மாற்றப்படுமா? அமைச்சர் பதில் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 9 March 2022

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தேதி மாற்றப்படுமா? அமைச்சர் பதில்

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தேதி மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். பள்ளி மேலாண்மைக்குழு ‘‘நம் பள்ளி நம் பெருமை'' என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழுவை வலுப்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் பரப்புரை தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. 

 விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தின் பரப்புரையையும், பள்ளி மேம்பாட்டு திட்ட செயலியையும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பள்ளி மேலாண்மைக்குழுவை நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் மூலம் வலுப்படுத்த உள்ளோம். இல்லம் தேடி கல்வித்திட்டம் போல் பள்ளி மேலாண்மைக்குழு திட்டத்தையும் வெற்றிகரமான திட்டமாக கொண்டு சேர்க்க இருக்கிறோம். தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 20 பேர் கொண்ட இந்த மேலாண்மைக்குழு உருவாக்கப்படும். இந்த குழுவை வலுப்படுத்துவதன் நோக்கமே, பெற்றோரின் பங்கு இதில் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காகவே. 

 அரசியல் தலையீடு இருக்கக்கூடாது 

 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் போகிறது. அதனை மாணவர்களின் சேர்க்கை விகிதத்துடன் எப்படி பொருத்துவது? என்பது பற்றி யோசித்து வருகிறோம். தற்போது ஆசிரியர் கலந்தாய்வு நடந்து வருகிறது. அதன் முடிவில் காலியிடங்கள் கிடைக்கும். தற்போது வரை 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் விகிதம் இருக்கிறது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மற்றும் நிர்வாக பதவிகளில் அரசியல் தலையீடு இருப்பதாக வரும் புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

பள்ளிக்கல்வித்துறையில் சாதி, மதம், அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றுதான் எங்களை முதல்-அமைச்சர் வளர்த்து இருக்கிறார். ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பொறுப்போடு செயல்பட வேண்டும். பள்ளி வளர்ச்சியை மையமாக வைத்து பணிகளை மேற்கொள்ளவேண்டும். தேர்வு தேதி மாற்றப்படுமா? பொதுத்தேர்வு நடைபெறும் மே மாதத்தில் (கோடைகாலம்) 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேதி மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறதா? பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர், ‘கொரோனா காரணமாக இந்த தேர்வு திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனது. பொதுவாக மே மாதத்துக்கு முன்பாகவே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிடும். அடுத்த ஆண்டு இது போல் தேர்வுகள் நடத்தப்படாது. இந்த முறை பெற்றோரும், மாணவர்களும் எங்களுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் 180 நாட்களுக்கு முன்பு தேர்வு அட்டவணையை வெளியிடுவோம். இந்த ஆண்டு 60 நாட்களுக்கு முன்புதான் வெளியிட முடிந்தது' என்றார்.


No comments:

Post a Comment