தினம் ஒரு தகவல் தற்பாதுகாப்புக்காக விலங்குகள் கையாளும் தந்திரங்–கள்

நமக்கு பசி எடுத்தால் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் விலங்குகள்...? இரையாவதும், இரையாகாமல் தப்பிப்பதுமே விலங்குகளின் வாழ்க்கைமுறை. சில விலங்குகள் தங்களிடம் இருக்கும் சில சிறப்பு அம்சங்களை வைத்தே, வேறு விலங்குகளுக்கு இரையாகாமல் தப்பித்துக்கொள்ளும். பச்சோந்தி, மரப்பல்லி, பாலைவன பாம்பு போன்ற விலங்கினங்கள் சுற்றியிருக்கும் சூழலுக்கு ஏற்ப தன்நிறத்தை மாற்றிக்கொள்ளும். 

மான், கங்காரு போன்ற விலங்குகளுக்கு கால்களே கேடயம். எதிரிகள் வருவதை பார்த்துவிட்டால் போதும், இவை ஓட்டமெடுத்துவிடும். முயலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். அதுவும் நேராக ஓடாமல் இடமும் வலமும் மாறி மாறி ஓடும். இந்த திசை மாற்றம், துரத்தும் எதிரியைக் குழப்பும். துரத்தும் விலங்கு ஓயும்வரை, முயல்கள் ஓடுவதை நிறுத்தாது. அணில்கள் மரமேறுவதில் மட்டுமல்ல, ஒளிந்துகொள்வதிலும் தேர்ச்சிபெற்றவை. எதிரியை பார்த்துவிட்டால் போதும். உச்சாணி கிளைக்கு தாவிவிடும். 

நிச்சயம் அதுவரை மற்ற விலங்குகள் வரமுடியாது என்று அவற்றுக்குத் தெரியும். மரங்களில் வாழும் போசம் எனப்படும் அமெரிக்க உயிரினம், தந்திரத்தால் தப்பித்துவிடும். சில விலங்குகள், இறந்த விலங்குகளைச் சாப்பிடாது. அதனால் எதிரி விலங்கைப் பார்த்ததும் போசம், இறந்ததுபோல சுருண்டு படுத்துவிடும். கண்கள் நிலைகுத்தி, நாக்கு வெளியே தள்ளி தத்ரூபமாக நடிக்கும். அதைப் பார்க்கும் வேட்டையாடும் விலங்கு, அது இறந்துவிட்டதாக நினைத்து விலகிச் சென்றுவிடும். 

 தப்பித்து ஓடுவதைவிட எதிரியை ஒரு கணம் திசைதிருப்பி தப்புவதில் தேர்ச்சி பெற்றவை சில வகை தேரைகள். தன் முன்னால் எதிரி வந்ததுமே நுனிக்கால்களில் நின்றுகொள்ளும். முடிந்தவரை காற்றை உள்ளிழுத்து, உடம்பைப் பெரிதாக்கும். பார்த்துக் கொண்டிருக்கும்போதே 3 மடங்கு பெரியதாக மாறிய தேரையைப் பார்த்து எதிரி விலங்கு பயந்து ஓடிவிடும். இதேபோல ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு வகையில் தன்னைத் தற்காத்துக் கொள்கின்றன.

Post a Comment

Previous Post Next Post

Search here!