இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு பல்கலைக்கழக மானியக்குழு அழைப்பு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 28 March 2022

இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு பல்கலைக்கழக மானியக்குழு அழைப்பு

இளங்கலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வை ஏற்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அழைப்பு விடுத்துள்ளது. 

பொது நுழைவுத்தேர்வு மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) முடிவு செய்திருக்கிறது. அதன்படி அதற்கான தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்த இருக்கிறது. 


இதற்கு வருகிற 2-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அழைப்பு விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவி பெறும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022-23-ம் ஆண்டு முதல் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு தொடர்பான விரிவான விவரங்கள் https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 


மாநில பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு தற்போது 12-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் தாங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வு மூலம் நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், பிற உயர்கல்வி நிறுவனங்கள் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 

வெவ்வேறு தேதியில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாலும், சில பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒரே நேரத்தில் வருவதாலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு வாரியங்களை (மாநில வாரியம், சி.பி.எஸ்.இ. உள்பட வாரியங்கள்) சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் வகையிலும், அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், பிற உயர்கல்வி நிறுவனங்களும் தேசிய தேர்வு முகமையின் பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் மூலம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக்குழு அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

சீனாவில் படிப்பு பல்கலைக்கழக மானியக்குழுவும் (யு.ஜி.சி.), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் (ஏ.ஐ.சி.டி.இ.) இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு இருக்கின்றன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சீனாவில் சில பல்கலைக்கழகங்கள் நடப்பு மற்றும் வரக்கூடிய கல்வியாண்டுகளுக்கான பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா தொற்றையடுத்து சீன அரசு அங்கு செல்வதற்கு கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. 


2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அனைத்து விசாக்களையும் நிறுத்தி வைத்துள்ளது என்பதை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமான இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர சீனாவுக்கு திரும்ப முடியவில்லை. இதுவரை கட்டுப்பாடுகளில் அங்கு எந்த தளர்வும் செய்யப்படவில்லை. மேலும் படிப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று ஏற்கனவே சீன அதிகாரிகள் தெரிவித்தனர். 

தற்போது உள்ள விதிகளின் படி, முன் அனுமதியின்றி ஆன்லைன் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் இத்தகைய பட்டப்படிப்புகளை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகரிக்கவில்லை. மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் உயர் படிப்பில் மேலும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக, உயர் கல்விக்கான நோக்கத்தை தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் உரிய கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment