தினம் ஒரு தகவல் பயணத்தின் போதே அலுவலகப்பணி

பணியிடச் சூழல் சிறப்பானதாக இருந்தால் பணியாளர்களின் தொழில்திறன் மேம்படும் என்பது கார்ப்பரேட் உலகம் பின்பற்றிவரும் உத்திகளில் ஒன்று. பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதிக்கும் முறைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டாலும், அலுவலகச்சூழலை சிறப்பாக அமைத்துக் கொடுக்கவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால் அலுவலகச் சூழல் சிறப்பாக அமைந்தாலும், பணியாளர்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்த முடியாத மன அழுத்தங்களுடன் அலுவலகத்துக்கு வருகிறார்கள், என்கிறது ஆய்வுகள். 

வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு புறப்படும்போது ஊழியர்களிடம் காணப்படும் மனநிலையானது, அலுவலகம் சென்றடையும்போது இருப்பதில்லை என்றும் கூறுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள், போக்குவரத்துக்காக செலவிடும் நேரம். பொதுவாக அனைத்து துறைகளிலுமே இது நிலவுகிறது. அலுவலகம் ஒரு இடம் என்றால், வீடு இன்னொரு மூலையில் இருக்கிறது. வீட்டுக்கும் வேலையிடத்துக்குமான தூரம் சராசரியாக 20 கிலோமீட்டராக இருக்கிறது. 

இதனால் பணியாளர்களின் நேரமும் ஆற்றலும் வீணாகிறது என்கிறது, அந்த ஆய்வு. இதற்கு ஒரு தீர்வை கண்டுள்ளது புதுடெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் வேலை செய்வதற்கு ஏற்ற அலுவலக சூழல் கொண்ட ஒரு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் அலுவலக அமைப்புடன், இணைய தொடர்பு வசதிகள், காணொலி வசதி, பிரிண்டர் என ஒரு அலுவலகத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. எதிர்காலத்தில் இந்த நகரும் அலுவலகங்கள்தான் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் ஊழியர்களுக்கான தீர்வாக இருக்கும். 

இந்த வாகனத்தை தற்போது புதுடெல்லி - குர்காவ்ன் இடையே இயக்குகிறார்கள். இந்த சாலை மார்க்கம்தான் இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசலில் சிக்கித்திணறுகிறது. 30 கிமீ தூரத்தை கடக்க சாதாரணமாக 3 மணி நேரம் ஆகிறது. 

இதனால் ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர முடிவதில்லை. இதனால் இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டால், வேலைகளை செய்து கொண்டே அலுவலகம் சென்று விடலாம். இதனால் பயணமும் சிக்கல் இல்லை, வேலையும் தடைபடாது என்பதே இந்த வாகனத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலைகளை முடிக்க வேண்டும் என இலக்கு வைத்து செயல்படும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு இது சரியான தீர்வாக இருக்கும். 

 உலகம் முழுவதும் டிரைவர் இல்லாத கார்களுக்கான முயற்சிகள் நடந்து வருவதால், அடுத்தடுத்த ஆண்டுகளில் டிரைவர் இல்லாத இது போன்ற வாகனங்களை கொண்டுவரவும் சாத்தியம் உள்ளது. இது போன்ற வாகனங்கள் அதிகரிக்கும்போது போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் தெரிவிக்கிறார்கள்.

Post a Comment

أحدث أقدم

Search here!