தினம் ஒரு தகவல் கார் ஓட்ட உதவும் நவீன கேமராக்கள்

புதுமைகளும், புதுப்புது கண்டுபிடிப்புகளும் அதிகம் இடம்பெறும் துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. பேட்டரியால் ஓடும்கார்கள், ஹைட்ரஜனில் சீறும் கார்கள் என புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில், டிரைவர் இல்லாத கார்களை சாத்தியமாக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பின்புறம் வரும் வாகனங்களை கண்டு வழிவிட காரின் உள்பகுதியில் அமைந்துள்ள கண்ணாடியும், பக்கவாட்டில் வரும் வாகனங்களை பார்க்க இருபுறமும் கண்ணாடிகள் உள்ளன. 

காரை பின்னோக்கி இயக்க முயலும்போது அதற்கு கேமரா பொருத்திய கண்ணாடி உதவுகிறது. இதுபோன்ற பல வசதிகள் விலை உயர்ந்த கார்களில் இடம்பெறுகின்றன. ஆனால் இப்போது இதுபோன்ற முன்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் (ரியர்வியூ மிரர்ஸ்) இல்லாமல் அதற்கு பதிலாக கேமராக்களை பொருத்தி அதன் மூலம் வாகனங்களை பார்த்து, அதற்கேற்ப கார்களை செலுத்தும் வசதியோடு கார்கள் தயாரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ரியர் வியூ கண்ணாடிகளுக்கு பதிலாக கேமரா பயன்படுத்துவதால் அதிக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. ஏனெனில் தற்போது புழக்கத்தில் உள்ள ரியர் வியூ கண்ணாடிகளில் `பிளைன்ட் ஸ்பாட்’ எனப்படும் பகுதிகள் துல்லியமாக தெரியாது. 

ஆனால் கேமராவில் இதுபோன்ற குறைகள் கிடையாது. பின்னால் வரும் வாகனத்தின் முழுத்தோற்றம் துல்லியமாக தெரியும். மேலும் இரவில் வாகனங்களை பார்ப்பதற்கும், தேவைப்பட்டால் அகலமாக (வைட்) கேமரா லென்சை இயக்கவும் இதில் வசதி உள்ளது. ரியர் வியூ கண்ணாடிகள் வழக்கமாக டிரைவரின் பார்வை படும்படி உரிய இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். ஆனால் கேமராவுக்கு அது தேவையில்லை. கேமரா பொருத்தப்பட்டிருந்தால் அருகில் வரும் கார்கள் மட்டுமின்றி சைக்கிளில் வருவோர், போவோர், பாதசாரிகள் உள்ளிட்டவைகளும் கேமராவில் பதிவாகும். இதனால் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும் டிரைவர் பார்த்து அதற்கேற்ப வாகனத்தை இயக்கமுடியும். 

சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது இத்தகைய கேமரா பொருத்தப்பட்ட கார்களை தங்களது எதிர்கால மாடல்களில் பொருத்தத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற கேமராவில் பதிவாகும் காட்சிகள் டிரைவர் இருக்கையின் அருகில் உள்ள திரையில் அவரது பார்வையில் படும்படி உடனுக்குடன் தெரிந்தாக வேண்டும். அதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கையை நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. ஒருவேளை திரையில் காட்சிகள் தோன்றுவதில் பிரச்சினை ஏற்பட்டால் அதை டிரைவர்கள் எவ்விதம் எதிர்கொள்வது என்பதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும் பணியிலும் இத்துறை வல்லுனர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!