இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி திட்டம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 28 March 2022

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி திட்டம் இளம் வயதிலேயே விண்வெளி தொழில்நுட்பம் (Space Technology), விண்வெளி அறிவியல் (Space Science) மற்றும் விண்வெளி பயன்பாடுகள் (Space Applications) குறித்த அடிப்படை அறிவை வளர்க்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (ISRO) பள்ளி மாணவர்களுக்கு யுவிகா (YUVIKA) என்ற "இளம் விஞ்ஞானி திட்டம்" என்ற சிறப்பு திட்டத்தை 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. 


ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் இரண்டு வாரம் நடைபெறும் இப்பயிற்சியில் கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் அறிஞர்களின் உரைகள், புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் அனுபவப் பகிர்வுகள், செய்முறை விளக்கங்கள், ஆய்வகம் மற்றும் அங்குள்ள வசதிகளை பார்வையிடுதல், பிரத்யேக அமர்வுகளில் நிபுணர்களுடன் கலந்துரையாடுதல் ஆகியவை அடங்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய விழிப்புணர்வை நமது நாட்டின் எதிர்காலத் தூண்களாகிய இளைய சமுதாயத்திடம் ஏற்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். 


அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பணியில் அதிக அளவில் மாணவர்கள் ஈடுபட இத்திட்டம் ஊக்குவிக்கும். நாடு முழுதும் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 150 பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, பின் குறிப்பிட்டுள்ள இஸ்ரோவின் ஐந்து மையங்களில் மே 16 முதல் 28 வரை பயிற்சி முகாம் நடைபெறும். 
Vikram Sarabhai Space Centre (VSSC), Thiruvananthapuram 
U. R. Rao Satellite Centre (URSC), Bengaluru 
Space Application Centre (SAC), Ahmedabad 
National Remote Sensing Centre (NRSC), Hyderabad 
North-East Space Application Centre (NE-SAC), Shillong 


இப்பயிற்சியின் இறுதியில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்தப் பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ள மாணவர்கள் ஏப்ரல் 10, 2022 தேதிக்குள் www.isro.gov.in வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் ஏப்ரல் 10, 2022 அன்று வெளியிடப்படும். மாணவர்களின் பயணச் செலவு, பயிற்சிக்குத் தேவையான பொருட்கள், தங்குமிடம் மற்றும் உறைவிடம் ஆகியவற்றிற்கான செலவை இஸ்ரோ ஏற்கும். இப்பயிற்சி குறித்த மேலும் தகவல்களுக்கு www.isro.gov.in வலைத்தளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment