எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அட்டவணையில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் தொழிற்கல்வி படிப்பு தேர்வு யாருக்கு பொருந்தும்? என கல்வித்துறை விளக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 4 March 2022

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அட்டவணையில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் தொழிற்கல்வி படிப்பு தேர்வு யாருக்கு பொருந்தும்? என கல்வித்துறை விளக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அட்டவணையில், தொழிற்கல்வி படிப்புக்கான தேர்வு புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வு யாருக்கு பொருந்தும்? என கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. தொழிற்கல்வி படிப்பு தேர்வு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

அதன்படி, வருகிற மே மாதம் 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை மாணவ-மாணவிகளுக்கு பாடவாரியாக தேர்வு நடைபெற உள்ளது. அந்த அட்டவணையில் புதிதாக தொழிற்கல்வி பாடத்துக்கும் தேர்வு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் தொழிற்கல்வி படிப்பு தொடர்பான தேர்வு குறித்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. அது தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தேர்வு என்றும், தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து வரும் தமிழக அரசு, அதனை இந்த தேர்வு மூலம் மறைமுகமாக ஏற்று இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இந்த திட்டம் ஏற்கனவே 2018-ம் ஆண்டு 10-ம் வகுப்புக்கு பாடத்திட்டங்கள் மாற்றும் போதே கொண்டுவரப்பட்டது என்றும், இதற்கும், தேசிய கல்விக்கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தனர். யாருக்கு பொருந்தும்? அப்படியென்றால் இந்த தேர்வு யார்? யாருக்கு பொருந்தும்? அதற்கான மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்? என்பது போன்ற பல்வேறு வினாக்கள் மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களுக்கு எழுந்தது. 

அதுபற்றி கல்வித்துறை வட்டாரத்தில் விளக்கம் கேட்டபோது, ‘தொழிற்கல்வி படிப்புகளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் 9 லட்சம் மாணவர்களில் ஒரு சதவீதம் மாணவர்கள் (9 ஆயிரம் பேர்) படித்து வருகிறார்கள். அவர்களுடைய திறனை மேம்படுத்துவதற்காகவே பொதுத்தேர்வில் அந்த தேர்வை இணைத்து இருக்கிறோம். இந்த தேர்வை மற்ற மாணவர்கள் எழுத வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தப்பட்ட அந்த ஒரு சதவீத மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி படிப்புக்கான தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வும் 100 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது. ஆகவே அந்த ஒரு சதவீத மாணவர்களுக்கு மட்டும் மொத்தம் 600 மதிப்பெண்ணுக்கு தேர்வுகள் கணக்கிடப்படும்' என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment