அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - EDUNTZ

Latest

Search here!

Friday, 18 March 2022

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அமைச்சர் பேட்டி சேலத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று மாலை மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

 அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவது, தரமான கல்வி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கும் பல்வேறு கருத்துகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

 ஆசிரியர்கள் காலிப்பணியிடம் பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கழிவறைகள் அமைப்பு, குடிநீர் வசதி போன்ற கோரிக்கைகள் தான் அதிகளவில் உள்ளது. தற்போது ஆசிரியர்களின் பணி இட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த பணி முடிந்தவுடன் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நடத்தப்படும் ஆய்வுக்கூட்டத்தில் தெரியவரும். அதன்பிறகு எவ்வளவு ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்? என தெரியும். 

அதற்கு ஏற்ப ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 2013-ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்ச்சி பெற்றவர்கள் சுமார் 80 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால் ஆர்.டி.இ. சட்டத்தின்படி ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன. அதை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு முதல்-அமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் தயக்கம் கொரோனா தொற்றுக்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகளவில் நடைபெற்றுள்ளது. 

தமிழகத்தில் மாநில அளவில் பொருளாதாரத்தில் பின் தங்கியதாக 44 வட்டாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுபோன்ற பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். தென் மாவட்டங்களுக்கு ஆர்வத்துடன் பணிக்கு செல்வது போல், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் பணிக்கு வருவதற்கு ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்ற தன்னார்வலர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் மட்டுமே தேவைப்படுகிறார்கள். 

ஆனால் 6 லட்சத்து 6 ஆயிரம் பேர் தன்னார்வலர்களாக பணியாற்ற பதிவு செய்துள்ளனர். தன்னார்வலர்களின் பேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்த பிறகே நியமனம் செய்கிறோம். அவர்கள் மீது புகார்கள் ஏதேனும் வந்தால் அதை விசாரிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 35 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார். தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு பாடங்களை நடத்தக்கூடாது. இதை தடுக்கவே 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, விதிகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

No comments:

Post a Comment