சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத்திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு. இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன.
அவை: பரம்பரை, அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலையால் திடீரெனத் தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது (மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை).
யாருக்கு அதிக வாய்ப்பு?
புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.
‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறை அழற்சி நோய், கடுமையான காச நோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி வரும்.
அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது சளியில் ரத்தம் கலந்து வரும். இது பெரும்பாலும் 50 வயதுக்கு பிறகு வரும். மேற்சொன்ன அறிகுறிகள் மூலம் மாரடைப்பிலிருந்து மற்ற பிரச்சினைகளைப் பிரித்துணரலாம்.
நுரையீரல் ரத்த உறைவுக் கட்டி காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். மார்புப் பகுதியில் உள்ள தசை, நரம்பு, எலும்பு மற்றும் எலும்பிடை தசைகளில் உண்டாகும் நோய்கள் காரணமாகவும் நெஞ்சில் வலி ஏற்படலாம். தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய் இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். பொதுவாக, இந்த நோயாளியிடம் உணவுக்கும் நெஞ்சு வலிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிய முடியும். இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.
No comments:
Post a Comment