அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா நதியின் நடுவே ஜோர்ஹாட் அருகேயுள்ள கோகிலாமுக் பகுதியில் மிகப்பெரிய காட்டுக்கு உயிர் கொடுத்தவர்தான், ஜாதவ் பயேங்.
1,360 ஏக்கர் பரப்புள்ள ஒரு மணல்திட்டு காடாக செழித்து வளர தன் வாழ்க்கையையே கொடுத்துள்ளார். ஆற்றிடை மணல்திட்டின் மீது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் காடு இதுதான்.
2012-ம் ஆண்டில் புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு பாராட்டு விழாவுக்குப் பிறகே, ஜாதவ் பயேங்கின் சாதனை உலகின் கண்களில் பட ஆரம்பித்தது. 'இந்தியாவின் காட்டு மனிதன்' என்ற பட்டம் அப்போது வழங்கப்பட்டது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அருணா சபோரி எனும் தீவில் சமூக காடு வளர்ப்புத் திட்டத்தில் ஜாதவ் வேலைக்குச் சேர்ந்தார். தற்போது அவர் உருவாக்கியுள்ள கோகிலாமுக் காட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அப்பகுதி உள்ளது. அந்தத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டு எல்லோரும் இடத்தை காலி செய்ய, ஜாதவ் மட்டும் ‘தன் கடன் பணி செய்தல்’ என இருந்தார்.
1979-ல் அசாமில் கடுமையான வெள்ளம் வந்தபோது, கோகிலாமுக் மணல்திட்டில் நூற்றுக்கணக்கான பாம்புகள் கரையொதுங்கின. வெள்ளம் வடிந்தபோது, வெயிலின் வெம்மையில் பாம்புகள் மடிந்து போய் வரிசையாக கிடந்தன. அந்த மணல் திட்டில் மரங்கள் எதுவுமில்லை. பாம்புகளின் சடலங்களுக்கு அருகே சென்றபோது ஜாதவ் பயேங்கால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது வாழ்க்கை புதிய திசையில் பயணிக்க தொடங்கியது.
வனத்துறை அதிகாரிகளைப் பார்த்து, மணல் திட்டில் மரம் வளர்க்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார்.
மணல்திட்டில் எந்த மரமும் வளராது, மூங்கில் வேண்டுமானால் வளரலாம் என்றார்கள். உடனே வீட்டையும் கல்வியையும் துறந்த அவர், அந்த மணல் திட்டிலேயே வாழ ஆரம்பித்தார். ஒவ்வொரு மூங்கில் கன்றையும் பார்த்துப் பார்த்து வளர்த்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, அந்த மணல் திட்டு மூங்கில் புதரானது. அதன் பிறகு மரங்களை வளர்க்கும் நம்பிக்கை துளிர்க்க, மரக்கன்றுகளை சேகரித்து நட்டார்.
அப்புறம் அவர் செய்த முக்கியமான காரியம், தனது ஊரில் இருந்து சிவப்பு எறும்புகளை கொண்டுபோய் அந்த மணல்திட்டில் விட்டதுதான்.
எந்த ஒரு மண்ணையும் செழிக்க வைக்கும் மாயவித்தை எறும்பை போன்ற சிற்றுயிர்களிடம் ஒளிந்துள்ளது. அவை மண்ணின் தன்மையையே உருமாற்றக் கூடியவை. இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை, என்கிறார். அடுத்த சில ஆண்டுகளில் அந்த மணல்திட்டில் தாவரங்களும் உயிரினங்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் செழிக்க ஆரம்பித்தன. இன்றைக்கு ஜாதவ் உருவாக்கிய காட்டில் புலிகள், காண்டாமிருகம், யானைகள், மான்கள், முயல்கள் உள்ளன
No comments:
Post a Comment