தூத்துக்குடியில் ‘சைனிக்’ பள்ளி ராணுவ அமைச்சகம் ஒப்புதல் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 27 March 2022

தூத்துக்குடியில் ‘சைனிக்’ பள்ளி ராணுவ அமைச்சகம் ஒப்புதல்



2022-2023-ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் 21 ‘சைனிக்’ பள்ளிகளை தொடங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. இதில் தமிழகத்துக்கான ஒரு பள்ளி தூத்துக்குடியில் அமைகிறது. ‘சைனிக்’ பள்ளிகள் மாணவர்களை ராணுவத்துக்கு தயார்படுத்தும் நோக்கில் ‘சைனிக்’ பள்ளிகள் கடந்த 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. நாடு முழுவதும் ஏற்கனவே 33 ‘சைனிக்’ பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அமராவதியில் ஒரு பள்ளி உள்ளது. 


இந்த பள்ளிகள் அனைத்தும் மத்திய அரசின் ‘சைனிக்’ பள்ளிகள் சங்கம் என்ற அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நிலையில் கூட்டாண்மை முறையில் நாடு முழுவதும் மேலும் 100 சைனிக் பள்ளிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதாவது தொண்டு நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் மாநில அரசுகள் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் இணைந்து புதிய ‘சைனிக்’ பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதன்படி முதல்கட்டமாக 2022-2023-ம் கல்வி ஆண்டுக்காக 21 ‘சைனிக்’ பள்ளிகளுக்கு (முற்றிலும் உண்டு-உறைவிட பள்ளிகள்) ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. 


இதில் 12 பள்ளிகள் தொண்டு நிறுவனங்களுக்கும் (என்.ஜி.ஓ.), 6 பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கும், 3 பள்ளிகள் மாநில அரசுகளுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில்… இந்த 21 பள்ளிகளில் ஒரு பள்ளி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அது தூத்துக்குடியில் உள்ள விகாசா பள்ளியுடன் இயங்க உள்ளது. ‘சைனிக்’ பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்துதான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.

  இதற்கு தேசிய தேர்வு முகமை மூலம் தகுதித்தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் இதற்கான கல்வி அமர்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ‘சைனிக்’ பள்ளிகளின் இணையதளத்தை காணலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment