தமிழகத்தில் அடுத்த மாதம் 8-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிறப்பு மெகா முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 92.4 சதவீதத்தினரும், 77.69 சதவீதத்தினர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இருந்தாலும், இன்னும் 54 லட்சத்து 32 ஆயிரத்து 674 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 271 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
அந்தவகையில் தடுப்பூசி செலுத்தாத இந்த 2 கோடி பேரின் விவரங்களை சேகரித்து, அவர்களை இலக்கு வைத்து அடுத்த மாதம் 8-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.
வீடு தேடி சென்று அழைப்பு
அடுத்த மாதம் 1 மற்றும் 2-ந்தேதிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் எங்கெல்லாம் நடக்கிறது என்ற விவரங்களை சுகாதாரத்துறை மாவட்ட அலுவலர்களால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment