தினம் ஒரு தகவல் மனச்சோர்வு - EDUNTZ

Latest

Search here!

Monday, 18 April 2022

தினம் ஒரு தகவல் மனச்சோர்வு

வேலை செய்யும் திறனே ஆற்றல். அது வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தை போன்றது. நாம் பயன்படுத்தும்போது அதன் அளவு குறையும். சில நேரங்களில் நாம் சோர்வாக இருப்பதற்கும், சோர்வாக உணர்வதற்குமான காரணம் இதுவே. ஆற்றலை முறையாகப் பயன்படுத்தினால், நம்முடைய செயல்திறன் அதிகரிக்கும். இந்த ஆற்றலை நம்முடைய சில அன்றாட பழக்கவழக்கங்கள் தேவையில்லாமல் விரயமாக்குகின்றன. 


அந்தப் பழக்கவழக்கங்கள் நம்முடைய ஆற்றலைச் சுரண்டி, செயல்திறனை குறைத்து, மகிழ்ச்சியற்ற நிலைக்கு நம்மை தள்ளுகின்றன. அந்தப் பழக்கவழக்கங்கள் எவை என்பதை அறிவது, ஆற்றல் விரயத்தைத் தவிர்ப்பதோடு, நம்மை மேம்படுத்தவும் உதவும். உங்கள் பெற்றோரோ, ஆசிரியரோ யாராக இருந்தாலும், அவர்களிடம் உங்களை நிரூபிக்க தொடர்ந்து முயன்றால், அது உங்கள் ஆற்றலை முற்றிலும் களவாடி, சோர்வடைய செய்துவிடும். அவர்களிடம் நல்ல பெயர் எடுத்து, அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கும்போது, நீங்கள் உங்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து நிற்பீர்கள். 


முதலில் உங்கள் வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள். தெளிவான எல்லைகளை வரையறுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அவற்றைப்பிறரிடம் முறையாகவும் உறுதியாகவும் தெரிவித்துவிடுங்கள். உறவுகள் எப்போதும் ‘கொடுக்கல் வாங்கல்’ அடிப்படையிலானவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதிகப்படியான சுயவிமர்சனமும் சுயமதிப்பீடும் உங்களுக்குச் சோர்வை ஏற்படுத்தும். கடுமையான சுயமதிப்பீடு உங்கள் பலவீனத்தையே மிகைப்படுத்தும். உங்களைப் பற்றி நேர்மறையான எதையும் நீங்கள் உணரவில்லை என்றால், உங்களால் எப்படி உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்? உங்கள் மீது பரிவு காட்டிப் பழகுங்கள். உங்கள் வெற்றிகளை கொண்டாடுங்கள். 


உங்கள் முயற்சிகளைப் பாராட்டுங்கள். முக்கியமாக, உங்கள் தோல்விகளில், சறுக்கல்களில் கனிவாக இருங்கள். நீங்கள் முன்னேற விரும்பினால், கடந்த காலத்தை விட்டு வெளிவரும் தைரியம் உங்களுக்கு இருக்க வேண்டும். நிகழ்காலத்தில் வாழப்பழகுங்கள். கடந்த காலத்தின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை விட்டு உங்களால் வெளிவர முடியவில்லை என்றால், அதற்கென சிறிது நேரம் ஒதுக்கி சிந்தியுங்கள். பின்னர் உங்களுக்குள் எழும் எண்ணங்கள், கவலைகள் அனைத்தையும் எழுதி வைத்து பழகுங்கள். 


 எதிர்காலம் குறித்த சிந்தனை உங்களை எப்போதும் கவலைக்கு உள்ளாக்கும். வருங்கால நிகழ்வுகளை ஊகித்து, அதைக் கட்டுப்படுத்த முயல்வது பயனற்ற முயற்சி. அதனால், உங்களுக்குத் துக்கம், அமைதியின்மை, பதற்றம், மனச்சோர்வு போன்ற உணர்வுகள் மட்டுமே மிஞ்சும். அதிகமாகச் சிந்திப்பதும் அப்படிப்பட்டதான். உங்களால் கட்டுப்படுத்த முடியாததை தவிர்த்து, கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எப்படி வாழ விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டறிய உதவும் ஆற்றலை அது உங்களுக்கு அளிக்கும்.

No comments:

Post a Comment