பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளி விவரங்களைத் திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும்.
இப்பணிகளை மத்திய அரசு விரைந்து முடித்து பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகளை மத்திய அரசு புறம் தள்ள முடியாது.
பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை காக்க 1995-ம் ஆண்டிலும், 2012-ம் ஆண்டிலும் அரசியலமைப்புச் சட்டத்தில் இரு முறை திருத்தங்கள் செய்யப்பட்டன.
அதேபோல், மத்திய அரசின் உயர் பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து ஓ.பி.சி.களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment