குழந்தைகளுக்கு அழகான தூய தமிழ்ப் பெயர் சூட்டுவதற்கு உதவும் வகையில் புதுமையான வழிகாட்டு நூல் வெளியிடுவதற்கு மத்திய தமிழாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழ் செவ்வியலின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திருக்குறளை 58 பழங்குடியினர் மொழிகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும், தமிழில் உள்ள மணிமேகலை உட்பட சங்க இலக்கிய நூல்கள் மற்றும் இதர செவ்வியல்களை பல்வேறு உலக மற்றும் இந்திய மொழிகளில், இந்நிறுவனம் மொழிபெயர்த்து வருகிறது.
இதற்கிடையே சமீபகாலமாக குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் வைக்க, பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். இதன்காரணமாக தமிழ் பெயரை வைக்க நினைக்கும் பெற்றோர், புழக்கத்தில் தூய தமிழ் பெயர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த எண்ணத்தைக் கைவிடும் சூழலும் ஏற்படுகிறது. மேலும், தவறான அர்த்தமுள்ள பெயர்களையும் சில நேரங்களில் வைத்து விடுகின்றனர்.
இதை சரிசெய்யும் நோக்கத்தில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பெயர்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை மத்திய செம்மொழி நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவன இயக்குநர் இரா.சந்திரசேகரன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: செம்மொழி மத்திய நிறுவனம் மொழிபெயர்ப்பு நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதி நூல்கள் என பல்வேறு வெளியீடுகளைத் தமிழ் ஆய்வுலகத்துக்கு அளித்துள்ளது.
அடுத்தபடியாக ‘சங்க கால மக்கட் பெயர்க் களஞ்சியம்’ என்ற நூல் மிகவும் முக்கியத்துவமிக்க ஒன்றாக அமையவுள்ளது. சங்ககாலத் தமிழ் மக்களின் பெயர்கள் இயற்கையோடு ஒன்றியுள்ளன.
பெயர் என்பது ஒருவரின் முழு அடையாளமாகத் திகழ்வதை இலக்கியங்களில் அறிய முடிகிறது.
ஒருவரின் பெயர் என்பது அவரை மட்டும் குறிப்பிடுவதில்லை அவரது புலமை, சிந்தனை, ஆளுமைத் திறன், அவர் பெற்ற புகழ் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், குறிப்பாக அவரது மரபைத் தெரிவிப்பதாகவும் அமைகிறது.
எனவேதான், தொல்காப்பியர் மனிதர்களைக் குறிக்கக் கூடிய பெயர்கள் எப்படி அமைய வேண்டும், அப்பெயர்கள் அமைந்து வழங்க வேண்டிய சூழல்களை எல்லாம் தொகுத்து வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளார்.
சங்ககாலப் புலவர்கள் மன்னரை நோக்கிப் பாடும்போது அவரின் பெயர் நிலைக்கும்படியாகப் புகழ்பெறுக என்று பாடியுள்ள குறிப்புகளைப் புறப்பாடல்களில் காணமுடியும்.
தற்போதைய காலகட்டத்தில் பெயரில் என்ன இருக்கிறது என்று மிக மேலோட்டமாகச் சிந்தித்து பலரும் செயல்படுகிறார்கள். தமிழர்களுக்கு எல்லாமே பெயரில்தான் அடங்குகிறது. பெயரை கொண்டே இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அடையாளம் காண முடியும். நவீனம் என்ற மாயையில் தமிழ்ப் பெயர்கள் வழக்கொழிந்துவிட்டன.
இந்நிலையில்தான், புலவர் பா. இறையரசனின் ‘சங்க கால மக்கட் பெயர்க் களஞ்சியம்’ என்றொரு நூலை செம்மொழி மத்திய நிறுவனம் வெளியிட உள்ளது.
அரசர்கள், சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள், வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள், பொதுமக்கள் என இதில் 611 சங்க காலப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பெயருக்கான காரணம், அதற்கான விளக்கம் என அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழில் பெயர் சூட்டும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இக்களஞ்சியம் பெருந்துணையாக அமையும். இந்நூலின் துணையுடன் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டி மகிழ்ந்து மரபைப் பேணிக் காக்க அனைவரும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment