குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே பொதுத்தேர்வில் வினாக்கள் கேட்கப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Thursday, 7 April 2022

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே பொதுத்தேர்வில் வினாக்கள் கேட்கப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வில் வினாக்கள் கேட்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 


பொதுத் தேர்வு கொரோனா தொற்று காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் பொதுத்தேர்வுகள் இந்த முறை மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ந்தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு அடுத்த மாதம் (மே) 9-ந்தேதியும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5-ந்தேதியும் தொடங்குகிறது. 



அந்த மாத இறுதிக்குள் முடிக்கும் வகையில் தேர்வுத்துறை அட்டவணையை தயாரித்து உள்ளது. அந்த வகையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழகத்தில் 27 லட்சத்து 41 ஆயிரத்து 662 பேர் எழுத இருப்பதாக சமீபத்தில் கல்வித்துறை தெரிவித்து இருந்தது. அதன்படி, பொதுத்தேர்வை நடத்துவதற்கான அனைத்து பணிகளிலும் அரசு தேர்வுத்துறை தீவிரமாக இறங்கியிருக்கிறது. 

இந்தநிலையில் பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் நடத்தி முடிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படுமா? அதற்கு கல்வித்துறை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க உள்ளது? என்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 



அதற்கு அவர், ‘எந்த பாடத்திட்டத்தை நடத்தி முடிக்கவில்லையோ அதில் இருந்து வினாக்கள் கேட்கக்கூடாது என்பதுதான் நியாயமானது. கண்டிப்பாக அதை கவனத்தில் கொள்வோம்' என்றார். குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின்படி வினாக்கள் அமைச்சர் நேற்று முன்தினம் இந்த பதிலை சொன்ன நேரத்தில், நேற்று அரசு தேர்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பொதுத்தேர்வு தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
2021-22-ம் கல்வியாண்டுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும். எனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் சிலவற்றை நடத்தவில்லை என்று மாணவர்கள் கூறாதபடி, குறைக்கப்பட்ட அனைத்து பாடத்திட்டத்தையும் விரைந்து முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 30 முதல் 40 சதவீதம் வரை... கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் எவை? எவை? என்பது குறித்த முழு விவரங்கள் வெளியிடப்பட்டன. அந்த பாடத்திட்டத்தைதான் தற்போது விரைந்து முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்தவகையில், 10-ம் வகுப்புக்கு 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் பாடத்திட்டம் அப்போது குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment