தினம் ஒரு தகவல் இதுவும் முதுமைக்கான அடையாளம்...! - EDUNTZ

Latest

Search Here!

Friday, 22 April 2022

தினம் ஒரு தகவல் இதுவும் முதுமைக்கான அடையாளம்...!

இதுவும் முதுமைக்கான அடையாளம்...! 

வயது ஆக ஆக ஆண்கள் பலருக்கு பகலில் சிறுநீர் செல்வது குறைந்து, இரவில் அதிகமாகச் செல்லத் தொடங்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில், புராஸ்டேட் சுரப்பி வீங்குவது ஒரு முக்கியக் காரணம். அடிவயிற்றில் சிறுநீர்ப்பைக்கு கீழே, சிறுநீர் புறவழி தொடங்குகிற இடத்தில், சிறுநீர்ப்பையின் கழுத்தை சுற்றி தசையாலான சுரப்பி ஒன்று உள்ளது. 

அதற்கு புராஸ்டேட் சுரப்பி என்று பெயர். அதிகபட்சமாக 16 கிராம் எடையே உள்ள இச்சுரப்பி ஆண்களுக்கு மட்டுமே உள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு பாலியல் சுரப்பியாகும். இளமை பருவத்தில் புரதம் மற்றும் என்சைம்கள் கலந்த திரவம் சுரக்கிறது. இது விந்தணுவுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. விந்தணுவின் அளவு, இயக்கம் ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. பாலுறவு தொடர்பான உணர்ச்சிகளை ஊக்குவிப்பதும், விந்துவை சுமந்து செல்வதும் இந்தத் திரவம்தான். ஆகவே புராஸ்டேட் சுரப்பிக்கு ‘ஆண்மை சுரப்பி’ என்ற பெயரும் உண்டு. 

 பொதுவாக, வாலிப பருவத்தில் இது ஆரோக்கியமாகவே இருக்கும். வயது ஆக ஆக இது வீக்கமடையும். ‘பினைன் புராஸ்டேடிக் ஹைப்பர்பிளேசியா’ என்று இதற்கு பெயர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வீக்கம் ஏற்படுவது சாதாரணமானதுதான். முதுமையில் தலைமுடி நரைப்பதை போல இதுவும் முதுமையின் ஓர் அடையாளம் என கருதப்பட்டாலும், பலருக்கு இது ஒரு நோயாகத் தலையிடும்போது, இதைப் பிரச்சினை தரும் உறுப்பாக கருதுவதுண்டு. முக்கியமாக, இந்த சுரப்பி வீக்கமடைந்து சிறுநீர்ப்பையை அழுத்தி சிறுநீரை வெளியேற்றுவதில் பிரச்சினையை உருவாக்கும். 

சிறுக சிறுக சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது தடை உண்டாவது, சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்போது தயக்கம் ஏற்படுதல், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழித்து முடித்த பின்னரும் இன்னும் சிறுநீர் உள்ளது போன்று உணர்தல், மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல், கடைசியில் சொட்டுச்சொட்டாகச் சிறுநீர் சொட்டுதல் என இந்த அறிகுறிகளில் ஒன்றோ பலவோ காணப்படுமானால், அந்த நபருக்குப் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளதாகச் சந்தேகப்படலாம். 

பொதுவாக, இந்த வீக்கத்துக்கு பயப்படத் தேவையில்லை. ஆரம்ப நிலையில் இதை மருந்துகள் மூலமே சமாளித்துவிடலாம். முடியாதபோது, அறுவை சிகிச்சை மூலம் அல்லது நவீன லேசர் சிகிச்சையின் மூலம் புராஸ்டேட் வீக்கத்தை குறைத்துவிடலாம் என்றும், இந்த வீக்கத்துக்கு புற்றுநோய் காரணமாக இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக உரிய சிகிச்சை தேவை என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment