கொடுங்கோடையைக்கூட பனிக்கால மாலையாய் மாற்றும் ஏ.சி.யைக் கண்டுபிடித்தவர் வில்லிஸ் ஹவிலண்ட் கேரியர் (Willis Haviland Carrier). வில்லிஸ் 1876ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி அமெரிக்காவின் அங்கோலா என்ற இடத்தில் பிறந்தார்.
கார்னெல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார். நியூயார்க்கைச் சேர்ந்த பப்ளிகேஷன் நிறுவனம், பிரிண்டிங் மெஷினில் ஏற்பட்ட சில பிரச்சினைகளைத் தீர்க்க இவர் உதவியை நாடியது.
வில்லிஸ் அந்த அச்சகத்திற்குச் சென்றார்.
அவர்களின் பிரச்சினைகளை கவனமாகப் பார்த்து, அதிக வெப்பம்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் என்பதை புரிந்து கொண்டார். அதை சரி செய்வதற்கான மாற்றுவழிகளைக் கண்டுபிடித்து வரைபடமாக்கித் தந்தார். அவர் கொடுத்த வரைபடங்களே, ஏ.சி அமைப்புக்கு அடிப்படையான முதல் ஆவணம். 1902ம் ஆண்டில் அந்த வரைபடத்தில் காணப்பட்ட அமைப்புகள் எல்லாம் அந்த நிறுவனத்தில் தேவைப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டன. அந்த ஏ.சி அமைப்பில் திருப்தி அடையாமல் அதை இன்னும் மேம்படுத்துவதற்கு தீவிரமான ஆய்வில் ஈடுபட்டார்.
அதில் வெற்றியும் பெற்றார்.
1906ம் ஆண்டில் வில்லிஸ் தனது கண்டுபிடிப்புக்காக காப்புரிமையும் பெற்றார். அந்த சாதனம் ‘காற்றை பதனம் செய்து உபயோகப்படுத்தும் உபகரணம்’ (ஏர் கண்டிஷனர்) என்று அழைக்கப்பட்டது. இது ஒரு அறையின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி தேவையான குளிர்ச்சியோடு வைக்க உதவியது. இதனால் வில்லிஸின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.
ஏ.சி யூனிட்டுகளில் கம்ப்ரஸர் எப்போதும் இயங்குவதில்லை.
காரணம், ஒரு குறிப்பிட்ட வெப்ப அளவில் ஏ.சி இயங்க வைக்க வேண்டும் என்று ‘செட்’ செய்து வைத்து விட்டால், அந்த வெப்ப நிலை அதிகமாகும்போது மட்டும் கம்ப்ரஸர் மீண்டும் தானாக இயங்கி குளிரூட்டும். இந்த தானியங்கிக் கட்டுப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தவரும் இவர்தான். 1914ம் ஆண்டு இதற்கான காப்புரிமையும் பெற்றார் வில்லிஸ்.
© 2020 All Rights Reserved. Powered by Summ
No comments:
Post a Comment