நவீன உலகிற்கு தேவையான புதுமையான படிப்புகள் நிறைய வந்துவிட்டன. அதில் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான படிப்புகளை தெரிந்து கொள்வோம்.
🟠ஆர்க்கிடெக்ட் & பி.ஆர்க்
பெண்களின் இயல்புக்கு ஏற்ற படிப்புகளில் முதன்மையானது ஆர்க்கிடெக்ட் படிப்பு. சமூகத்தில் மிகுந்த மரியாதையையும், பெருமளவு வருமானத்தையும் தர வல்லது. கற்பனையும், பொறுமையும், ஈடுபாடும் இப்படிப்புக்கான முதன்மைத் தகுதிகள். படித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதானே பல மாணவர்களின் எதிர்பார்ப்பு. கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலை கிடைத்துவிட்டால் ரொம்பவே நல்லது என்ற எண்ணம்தான் பலரிடம் இருக்கிறது. நூற்றுக்கு இரண்டு பேர் கூட படிப்பை முடித்து, ‘நான் 10 பேருக்கு வேலை கொடுப்பேன்’ என்று இலக்கு வைப்பதில்லை. அப்படி இலக்கு வைத்து படிக்கும் பெண்களுக்கு ஏற்றது ஆர்க்கிடெக்ட் படிப்பு.
இப்படிப்பை முடித்தவர்கள் சுயமாகவே தொழில் செய்யலாம். இந்திய உள்கட்டமைப்புத்துறை மிகப்பெரும் வளர்ச்சியை எட்டி வரும் தருணம் இது. இளம் தலைமுறையின் பெருங்கனவாக இருப்பது சொந்த வீடுதானே? அதன் காரணமாக ஆர்க்கிடெக்ட் படித்தவர்களுக்கான தேவையும் அதிகரித் துக் கொண்டே போகிறது.
பி.ஆர்க் எனப்படும் ஆர்கிடெக்ட் ஐந்தாண்டு காலப் படிப்பாகும். இதைப் படிக்க விரும்புபவர்கள் NATA என்ற தேசிய நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வை கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் அமைப்பு நடத்துகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கவுன்சலிங் நடைபெறும்.
🟠சிவில் என்ஜினீயரிங்
சிவில் என்ஜினீயரிங் படிப்பில் நிறைய கிளைப்படிப்புகள் வந்து விட்டன. ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ், டவுன் அண்ட் கன்ட்ரி பிளானிங், இன்டீரியர் டிசைனிங், டிரான்ஸ்போர்ட்டேஷன், சாயில் டெக்னாலஜி, ஓஷன் அண்ட் கோஸ்டல் என்ஜினீயரிங் ஆகிய பிரிவுகளில் புதிய பொறியியல் படிப்புகள் உள்ளன. இளநிலையில் சிவில் என்ஜினீயரிங் முடித்துவிட்டு, முதுநிலையில் இதுபோன்ற கிளைப் படிப்புகளை படிப்பது புத்திசாலித்தனம். மத்திய, மாநில பொதுப்பணித்துறை உள்பட பல்வேறு துறைகளில் திறமையான சிவில் பொறியாளர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியால் தனியார் நிறுவனங்களிலும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. சுயமாகவும் தொழில் செய்யலாம்.
🟠 கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி
இது போன்ற படிப்புகள் பெண்களுக்கு எப்போதுமே எவர்கிரீன் தான். இன்று உலகில் அதிகம் மென்மொருள் அவுட்சோர்சிங் செய்யும் நாடு இந்தியாதான். அடுத்த பத்தாண்டுகளில் பல லட்சம் மில்லியன் டாலர் இந்திய மென்பொருள் சந்தையில் முதலீடாக வர இருக்கிறது.
இப்போதே, இந்தியாவில் செயல்படும் பிரதான மென்பொருள் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற, தகுதி வாய்ந்த ஊழியர்கள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்போடு உலகளாவிய தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வதோடு, படிக்கும் காலத்திலேயே தேவையான மென்பொருட்களை கற்றுக்கொண்டு, ஆளுமைத் தன்மையையும், மொழித்திறனையும் மேம்படுத்திக்கொள்ளும் மாணவர்களுக்கு மென்பொருள் நிறுவனங்களில் சிவப்புக் கம்பள வரவேற்பு காத்திருக்கிறது.
🟠மெக்கானிக்கல் என்ஜினீயரிங்
மெக்கானிக்கல் எல்லாம் பெண்களுக்கு பொருந்தவே பொருந்தாது என்று கருதப்பட்ட காலம் ஒன்று உண்டு. ஆனால் இப்பிரிவிலும் நிறைய சிறப்புப் படிப்புகள் வந்து விட்டன. ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ் படிப்புக்கும் நிறைய வரவேற்பு இருக்கிறது. ஆட்டோமொபைல், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், மேனுஃபேக்சரிங் என்ஜினீயரிங், பிரிண்டிங் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மேனு ஃபேக்சரிங், எனர்ஜி, இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மென்ட், புரொடக்ஷன் என்ஜினீயரிங், மைனிங், மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், இண்டஸ்ட்ரியல் அண்ட் புரொடக்ஷன் என்ஜினீயரிங் என இதில் ஏகப்பட்ட கிளைப் படிப்புகள் உண்டு. ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், மேனுஃபேக்சரிங் என்ஜினீயரிங் படிப்புகள் பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை.
பொதுவாக, இளநிலையில் பிரதான படிப்பான மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கையே நேரடியாக படிப்பது சிறந்தது. விரும்பினால் முதுநிலையில் சிறப்புப் பிரிவுகளைப் படிக்கலாம். புராடெக்ட் டிசைனிங், ஆட்டோமேட்டிவ் டிசைனிங், வெல்டிங் என்ஜினீயரிங், பைப்பிங் என்ஜினீயரிங், எனர்ஜி என்ஜினீயரிங், தெர்மல் என்ஜினீயரிங் என மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முதுகலை படிக்க பல்வேறு சிறப்புப் பிரிவுகள் இருக்கின்றன.
🟠எலெக்ட்ரிக்கல்
இப்பிரிவில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் கண்ட்ரோல் என இரண்டு கிளைப்படிப்புகள் உள்ளன. ஈடுபாடும் தனித்திறனும் கொண்ட பெண்களே இப்படிப்பை தேர்வு செய்ய வேண்டும். இப்படிப்பு முடித்தவர்களை அண்மைக்காலமாக மென்பொருள் நிறுவனங்களும் தேர்வு செய்கின்றன.
என்ஜினீயரிங் துறையில் மற்றுமொரு அடிப்படைப் பிரிவான எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்கிலும் வாய்ப்புகளுக்கு குறைவில்லை. இதுவும் பெண்களுக்கு ஏற்ற துறையே. எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் மட்டுமல்ல... மென்பொருள் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புண்டு.
No comments:
Post a Comment