கப்பலில் கேப்டனாக வேண்டும் அல்லது தலைமை பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறதா? - EDUNTZ

Latest

Search Here!

Monday, 30 May 2022

கப்பலில் கேப்டனாக வேண்டும் அல்லது தலைமை பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறதா?

கப்பலில் கேப்டனாக வேண்டும் அல்லது தலைமை பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறதா? இதற்கான படிப்புகளை வழங்குகிறது, சென்னையில் உள்ள இந்தியன் மாரிடைம் யுனிவர்சிட்டி (IMU) என்று அழைக்கப்படும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம். லட்சக்கணக்கில் சம்பளம். ஆறு மாதம் வேலை. ஆறு மாதம் விடுமுறை. பல நாடுகளுக்கும் செலவில்லாமல் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு. வேலை நேரம் போக மீதி நேரம் சொகுசான பயணத்துடன் கூடிய வாழ்க்கை. 

பணியின் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு கப்பலை இயக்கும் கேப்டன் அல்லது தலைமை பொறியாளர் பதவி என பல வித வசதிகள். கப்பலில் வேலை பார்க்க ஆர்வம் இருக்கிறதா? உங்களுக்கு கலங்கரைவிளக்காய் வழிகாட்ட காத்திருக்கிறது, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்ட்டில் அமைந்திருக்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம். இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் 2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் செயல்பட ஆரம்பித்தது. மும்பை, கோல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, கொச்சி, கண்ட்லா ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் தேசிய கடல்சார் மையங்களும் இதன் கீழ் செயல்பட்டு வருகின்றன. 

இதைத்தவிர, பல்வேறு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடல்சார் படிப்புகள் வழங்கி வந்த கல்லூரிகளும் படிப்படியாக இந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. தற்போது 41 கடல் சார் கல்லூரிகள், இந்திய கடல் சார் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளன. இதில், 15 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. இதைத்தவிர, சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் மரைன் என்ஜினீயரிங் படிப்பையும், தனியார் கல்வி நிலையங்கள் டிப்ளமோ படிப்பையும் வழங்குகின்றன. இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. விஜயன், இப்பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். . 

”தேசிய கடல்சார் மையத்தில் பி.எஸ்ஸி., படிப்புக்கு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர்கள் சேரலாம். ஒரே சமயத்தில் இந்தப் படிப்பில் 320 பேர் சேரமுடியும். அத்தனை பேருக்குமே படிப்பின் முடிவில் வேலை உறுதி என்பதுதான் இந்தப் படிப்பின் சிறப்பு. சர்வதேச அளவில் இந்தியர்களைத்தான் கடல்பணிக்கு பெருமளவில் தேர்வு செய்வது நமக்கு கூடுதல் சிறப்பு. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது” என்றவர், நாங்கள் இயற்பியல், கணிதம், வேதியியல் பட்டப்படிப்பு படித்திருப்பவர்கள் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பில் சேரும் வகையில் 6 மாதப் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளோம். அதேபோல், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஒருவருடப் படிப்புக்குப் பின்னர் நேரடியாக கப்பல் பணிகளில் சேரலாம். இந்தப் பயிற்சி படிப்புக்கு ’ போஸ்ட்கிராஜுவேட் மரைன் இன்ஜினீயரிங்’ பட்டம் வழங்கப்படும். 

இவர்கள் முதன்மை இன்ஜினீயராக வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள். இவைதவிர, கடல்சார் பல்கலைக்கழகத்தில் புதிதாக எட்டுத் துறைகளை உருவாக்கி உள்ளோம்” என்றார். ”இந்தத் துறையைப் பொறுத்தவரையில் 21 வயதில் வேலைக்குச் சேர்பவர்கள் 30 வயது வரை சம்பாதித்துவிட்டு, கப்பல் பணியில் இருந்து விடுபட்டு, துறைமுகம் சார்ந்த பணிக்கு வந்துவிடலாம். கடல் வளமும், கப்பல் போக்குவரத்தும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள் என்பதால், வேலைவாய்ப்புக்கும் பஞ்சம் இருக்காது’. தற்போது எங்களிடம் உள்ள எம்பிஏ படிப்புக்கு பெரிய அளவில் தேவை உருவாகி இருக்கிறது. மேலாண்மைப் படிப்பில் சேர பட்டப்படிப்பு படித்தால் போதுமானது. பி.இ., மெரைன் இன்ஜினியரிங் படிப்பில் 320 இடங்கள், பி.டெக்., நேவல் ஆர்கிடெக்சர் அண்ட் ஓஷன் இன்ஜினியரிங் படிப்பில் 40 இடங்கள், எம்.பி.ஏ., ஷிப்பிங் அண்ட் போர்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.பி.ஏ., இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பில் தலா 30 இடங்கள் உள்ளன. மேலும், பி.இ., மெரைன் இன்ஜினியரிங் படிப்பில், ‘ஸ்பான்சர்டு’ பிரிவில் இடங்கள் உள்ளன. 

இப்பல்கலைக் கழகத்தின் சென்னை, மும்பை, கோல்கட்டா வளாகங்களில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன” என்று தொடர்ந்தார். “வருகிற ஆண்டுகளில் கடலோர மாநிலங்களில் புதிய கல்வி மையங்களை திறக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். இதன் மூலம் கப்பல் துறையில் பெரிய அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பொதுவாக, கப்பல் போக்குவரத்து பிரிவுகளில் பெண்கள் பணிபுரிவதில்லை. 

ஆனால், தற்போது பலரும் விரும்பும் துறையாக மாறி இருப்பதால் பெண்களும் விண்ணப்பித்து சேர ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி சேர்பவர்களுக்கு நாட்டிக்கல் சயின்ஸ் மற்றும் மரைன் இன்ஜினீயரிங் படிக்க உள்ள பெண்களுக்கு டியூசன் கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியால் கப்பல் கட்டுமான துறையும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் நாங்கள் பி.எஸ்சி கப்பல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு படிப்பை தொடங்கி இருக்கிறோம். இது கொச்சியில் நடந்து வருகிறது. இதைப்போலவே விசாகப்பட்டினத்தில் நேவல் ஆர்கிடெக்சர் படிப்பையும் தொடங்கி இருக்கிறோம். இங்கு படிப்பவர்கள் இந்திய கடற்படை கப்பல் பிரிவில் வேலைவாய்ப்பை பெறலாம்” என்றார் விஜயன். நாங்கள் இந்திய சட்டத்துறையுடன் செய்துக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், அடுத்த மாதம் கடல்சார் சட்டப்படிப்பை துவங்க இருக்கிறோம். 

இதில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சட்டக்கல்வி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நாங்கள் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புக்கும், மரைன் இன்ஜினீயரிங் மற்றும் இதர பிரிவு படிப்புகளுக்கும் நடத்தப்படும் நுழைவு தேர்வு 150 வினாக்கள் கொண்டதாக இருக்கும். இதில் 6 விதமான பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதல் மூன்று பகுதியில் இருந்து கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும். அடுத்த மூன்று பகுதிகள் பொது அறிவு, பொது ஆங்கிலம் மற்றும் திறனறிவு சார்ந்தவையாக இருக்கும். நுழைவு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெறுகிறவர்களுக்கு நாங்கள் பத்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்குகிறோம். 

எங்கள் பல்கலைக்கழகத்தில் சேரும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு பெருமளவில் நிதி உதவி செய்து வருகிறது. இதைப்போலவே மீனவ சமூகத்தை சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் பலவிதமான சலுகைகள் இருக்கின்றன. பொதுவாக கடல்சார் படிப்பு படிக்க வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. இளைஞர்கள் தைரியமாக இப்படிப்பில் சேரலாம்” என்றார் துணைவேந்தர் விஜயன். நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பை படிக்க வேதியியல், இயற்பியல், கணிதம் பட்டப்படிப்பை படித்தவர்களும் சேரலாம். நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புக்கான கட்டணம் இரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய். கடல்சார் பல்கலைக்கழகத்தில் சேரும் போது பல வங்கிகளும் கல்வி கடன் வழங்க முன்வருவதால் படிப்பு கட்டணம் பற்றி கவலைப்படத்தேவையில்லை. 


பொறியியல் பிரிவில் செல்ல விரும்புகிறவர்களுக்கு நான்கு ஆண்டுகள் மரைன் இன்ஜினீயரிங் படிப்பு படிக்க வேண்டும். படிப்பின் போது அதிகளவில் பயிற்சி அளிக்கப்படும். கடல் சார் பல்கலைக்கழகத்தின் கோல்கத்தா, சென்னை மையங்களில் மரைன் இன் ஜினீயரிங் படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இந்த படிப்பை முடித்தவர்கள் பொறியாளர் பயிற்சியாளராகவோ அல்லது இளநிலை பொறியாளராகவோ சேரலாம். இறுதிநிலையாக, தலைமை பொறியாளர் பதவி பெறலாம். கடல்சார் படிப்பில் டிப்ளமோ முடித்தாலே வேலை வாய்ப்பு மிகவும் எளிதாக கிடைப்பதால், அதற்கு மேல் பொறியியல் படிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிறது. 


இதனால் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பிரமாதமாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பிட கால கப்பல் பணி அனுபவத்திற்கு பிறகு, கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை பெறமுடியும். மேலும், துறைமுகங்கள் சார்ந்த வேலைவாய்ப்பிலும் சேர முடியும். கப்பல் துறைமுகத்துக்கு வரும்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பழுது பார்க்கும் பணியை பார்த்திடவும் பெரிய அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இதனால் கடல்சார்ந்த வேலை வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. கப்பல் போக்குவரத்தில் இப்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தவிர, சொகுசு பயணம் செய்பவதும், சுற்றுலா செல்வதும் அதிகரித்திருக்கிறது. 

இதனால் கப்பல் சுற்றுலா சார்ந்த பிரிவுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. சம்பளமும் பெரிய அளவில் கிடைக்கிறது. துறைமுகக் கட்டுமானப் பொறியியல், எண்ணெய் வளங்களைக் கடலில் கண்டறிவது தொடர்பான பெட்ரோல் இன்ஜினீயரிங் படிப்புகளும்கூட இப்போது முக்கியத்துவம் பெறத் தொடங்கி இருக்கின்றன. அதனால், கடல்சார் படிப்பு என்பதற்கான எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது.இப்போது மின்துறை முக்கியத்துவம் பெற்று வருவதால், அந்தத் துறையில் தெர்மல் பவர் பிளான்ட் மற்றும் இதர மின் தயாரிப்பு நிறுவனங்களில் நிர்வாகப் பணிகளுக்கு கப்பல் துறையில் வேலை பார்த்தவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கிறது. 

அதேபோல நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகப் பணிகளிலும் எளிதாக வேலைக்குச் சேரமுடியும். மரைன் இன்ஜினீயரிங் படித்தால், கப்பலில் இருக்கும்போதும் வாய்ப்பு; கரைக்கு வந்தாலும் வாய்ப்பு.கப்பல் பணியில் இருந்து விடுபட்டு வருகிறவர்களுக்கு மரைன் கல்லூரிகளில் ஆசிரியர் பணி, துறைமுகங்களில் ஷிப்பிங் நிறுவனங்களில் சர்வேயர் பணி, பயிற்சியாளர் பணி, டெக்னிக்கல் சூப்பிரடென்டன்ட் போன்ற வேலைகள் கிடைக்கின்றன. மேலும் தகவலுக்கு: https://www.imu.edu.in

No comments:

Post a Comment