ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய பின்பு தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெற்றனர்.
ஓய்வு பெறும் வயது உயர்வு
கடந்த 2020-ம் ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்திய அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021-ம் ஆண்டு ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் காரணமாக 2020-ம் ஆண்டு மே மாதம் 58 வயது பூர்த்தியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு கிடைத்தது.
இந்தநிலையில் 2 ஆண்டுக்கு முன்பு 58 வயது பூர்த்தியாகி பணி நீட்டிப்பு கிடைக்கப்பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நேற்றுடன் 60 வயது நிறைவடைந்தது.
7 ஆயிரம் பேர் பணி ஓய்வு
இதன் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 5,286 பேர் நேற்று ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
அரசின் வாரியங்கள் மற்றும் கழகங்களையும் சேர்த்தால் சுமார் 7 ஆயிரம் பேர் நேற்று ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றதாக தெரிகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக மாற்றப்பட்ட நிலையில் முதல் முறையாக 7 ஆயிரம் பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
புதிய நடைமுறையின்படி கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளனர்.
மாதம்தோறும் 2 ஆயிரம் பேர்
இனி மாதம்தோறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேர் வரை ஓய்வு பெறுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிதியாண்டில் (2022-2023) மட்டும் 25 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள் என கூறப்படுகிறது.
ஓய்வு பெறும்போது ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்படுதால் ஏற்கனவே பணியில் இருந்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகமாவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
விரைந்து நிரப்ப வேண்டும்
இதுகுறித்து என்.ஜி.ஓ. சங்க தலைவர் சண்முகராஜன் கூறும்போது, ‘அரசு துறையில் மொத்தம் உள்ள 15 லட்சம் பணி இடங்களில் சுமார் 7 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதன் காரணமாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, கூட்டுறவு துறை, கருவூலத்துறை ஆகிய துறைகளில் 3 பேர் பார்க்க வேண்டிய வேலையை ஒருவர் பார்க்க வேண்டியது உள்ளது.
இதனால் அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாகிறது. எனவே, காலி பணியிடங் களை விரைந்து நிரப்ப வேண்டும். மக்கள் திட்டங்களுக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment