இந்த ஆண்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற
அரசு பள்ளி மாணவர்கள் 2.70 லட்சம் பேர் தகுதி
கல்வித்துறை தகவல்
அரசு பள்ளிகள் சட்டம் 2021-ன் படி, சமீபத்தில் தமிழ்நாட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் மட்டுமே படித்த மாணவ-மாணவிகளுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டால் பயனடையும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடைய சான்றிதழ்கள் இணையதளம் மூலம் சரிபார்க்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பயன்படுத்திக்கொள்ள பொருத்தமான பிளஸ்-2 முடித்த 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவ-மாணவிகளின் பட்டியல் https://studentrepo.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த இணையதளத்துக்கு சென்று, தங்கள் மாவட்டத்தையும் பள்ளியின் பெயரையும் குறிப்பிட்டு, பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
ஒருவேளை 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து இந்த பெயர்ப்பட்டியலில் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை என்றால், இணையதளம் மூலம் மாணவர்கள் ‘எமிஸ்' அடையாள சான்றிதழை பயன்படுத்தி தங்கள் விவரங்களை மீண்டும் அளித்தால் விரைந்து தீர்வு காணப்படும். அந்த மாணவர்கள் அரசு பள்ளியில் படித்தது உறுதி செய்யப்பட்டால், அவர்களின் பெயர், பட்டியலில் சேர்க்கப்படும்.
கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment