10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தோல்வியை சந்திந்த மாணவர்கள், உடனடியாக துணைத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறும் வகையில் அதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வில் வெற்றி, தோல்வி இருக்கும். குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், உயர்கல்விக்காக என்ன படிப்பை படிக்கலாம்? என்பதை தேர்வு செய்வதற்கு ஆலோசனை வழங்கவும் 14417, 1098 என்ற உதவி எண்களை அழைக்கலாம். உயர்கல்வி செல்வதற்கான தகுதியை பெறாதவர்களுக்கு (தோல்வி அடைந்தவர்கள்) உடனடி வாய்ப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் துணைத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி, 12-ம் வகுப்புக்கு அடுத்த மாதம் (ஜூலை) 27-ந் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதியும் துணைத்தேர்வு நடக்க இருக்கிறது.
தேர்வில் தோல்வி அடைந்தவர்களை தவிர, தேர்வுக்கு வராத மாணவ-மாணவிகளும் துணைத்தேர்வை பயப்படாமல் எழுதுங்கள். நாங்கள் தன்னம்பிக்கை தருகிறோம். தற்போது தேர்வை எழுதிய மாணவ-மாணவிகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வருகிற 24-ந் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் சரியான முறையில் திருத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 100 சதவீதம் தேர்ச்சி என்று போட்டால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு சமம். மாணவ-மாணவிகள் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறீர்களோ? அதே ஆர்வத்தை உயர்கல்வியிலும் காட்டுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment