தினம் ஒரு தகவல் : சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு...! - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 15 June 2022

தினம் ஒரு தகவல் : சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு...!

சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு...! கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை கண்ணின் உள்படலத்தை, குறிப்பாக விழித்திரையை பாதிக்கும். இந்த நிலைக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்று பெயர். 

இதன் ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது. நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ஒருமுறையாவது கண்களை பரிசோதிப்பது அவசியம். நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரகம் பாதிக்கப்படுவது டயாபடிக் நெப்ரோபதி. இந்த நிலையை தடுக்க ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், 4 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை மைக்ரோஅல்புமின்யூரியா என்ற எளிய பரிசோதனையை செய்ய வேண்டும். 
உடல் உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளில் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுத்துவது, டயாபடிக் நியூரோபதி. இதன் காரணமாக கை, பாதங்கள் மரத்துப்போதல் அல்லது ஜிவுஜிவு உணர்வு போன்றவை ஏற்படலாம். கால்களில் இருந்து நமக்குத் தெரியாமலேயே செருப்பு நழுவிப் போதல் அல்லது ஆண்கள், பெண்களில் பாலுணர்வு படிப்படியாக குறைதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். 
நீரிழிவு நோய் ரத்த தமனிகளை அடைத்துவிடும் என்பதால், மாரடைப்பு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, புகைப்பவர்கள், அதிக ரத்த அழுத்தம் உடையவர்கள், கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மாரடைப்பின் வழக்கமான அறிகுறிகளான மார்புவலி போன்ற எதுவும் இல்லாமல் சத்தமில்லாத மாரடைப்பு தாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள், வழக்கமான இதய பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். 
ஹைபோகிளைசீமியா அல்லது குறைந்த ரத்தச்சர்க்கரை என்பது நீரிழிவு நோயின் மோசமான சிக்கல். அதிக நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதாலோ அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாததாலோ இந்த பிரச்சினை ஏற்படும். வியர்த்தல், பலவீனம், தலைசுற்றல் உள்ளிட்டவை சர்க்கரை குறைவின் அறிகுறிகள். இதை கண்டுகொள்ளாவிட்டால், கோமா நிலைகூட ஏற்படலாம். எனவே ரத்தச்சர்க்கரை, ரத்தஅழுத்தம், கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. 3 மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு நோய் டாக்டரை சந்தித்து எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது. வழக்கமான உடற்பயிற்சி, 3 முறை சாப்பிடுவதற்கு பதிலாக, 4 முதல் 5 முறை சாப்பிடும் முறையை பின்பற்றுவது, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வது. புகைப்பதை கைவிடுவது. 
பாதங்களில் நோய்த்தொற்று, கால்ஆணி, காய்ப்பு போன்றவை ஏற்படுகின்றனவா என்று தினசரி கண்காணிப்பது, கண் விழித்திரையை ஆண்டுதோறும் பரிசோதிப்பது, 6 மாதங்களுக்கு ஒருமுறை சிறுநீரகத்தை பரிசோதனை செய்வது போன்றவற்றை பின்பற்றுதல் நீரிழிவு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என மருத்துவத்துறையினர் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment