அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினர் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். அரசின் பல்வேறு தலைமை பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க அரசின் தலைமை அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் விஞ்ஞானியான ஆர்த்தி பிரபாகர் என்பவரை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.
இவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் அவசியமாகும்.
செனட் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தலைமை அறிவியல் ஆலோசகர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்கிற பெருமையை ஆர்த்தி பிரபாகர் பெறுவார்.
ஆர்த்தி பிரபாகரின் நியமனம் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், “ஆர்த்தி பிரபாகர் புத்திசாலி. பெரிதும் மதிக்கப்படும் அறிவியலாளர். அறிவியல், தொழில்நுட்பம் முதலானவற்றில் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்வது, கடினமான சவால்களை எதிர்கொள்வது மற்றும் சாத்தியமற்றதை சாத்தியமாக்குவதில் புதுமைகளைப் பயன்படுத்துவதற்கு வழிநடத்துவார்” என கூறினார்.
63 வயதான ஆர்த்தி பிரபாகர், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பிறந்தவர். இவரின் 3 வயதில் குடும்பத்தினர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்துக்கு குடியேறினர்.
கர்லிபோனியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஆர்த்தி பிரபாகர், அதன் பின்னர் 7 ஆண்டுகள் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தில் பணி புரிந்தார். மேலும் இவர் பயோடெக்னாலஜி, ஆற்றல் சக்தி, பொது சுகாதாரம் ஆகிய தளங்களில் முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளார்.
No comments:
Post a Comment