கணினி முன்பு அமரும்போது கவனம் தேவை! - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 14 June 2022

கணினி முன்பு அமரும்போது கவனம் தேவை!

கணினி முன்பு அமரும்போது கவனம் தேவை!

கணினியில் தெரியும் எழுத்தை படிப்பதற்கு கழுத்தையோ, முதுகுப் பகுதியையோ முன்னோக்கி நீட்ட வேண்டிய அவசியமில்லாத நிலையில் அமர்ந்திருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அலுவலகப் பணியில் ஈடுபடுபவர்கள் தினமும் நீண்ட நேரம் கணினித் திரை முன்பு அமர்வதை தவிர்க்கமுடியாது.

வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணி செய்யும்போது கணினி, லேப்டாப், செல்போன் என திரைகளில் செலவிடும் நேரம் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதும் சவாலானது. திரையின் முன்பு மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கும்போது கண்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை தவிர்க்கும் வழிமுறைகள் வருமாறு:

அமரும் விதம்:

கம்ப்யூட்டர் அமைந்திருக்கும் இடத்தை அடிக்கடி இடம் மாற்றிக்கொள்வது நல்லது. கணினியின் திரை உங்கள் கண் மட்டத்திற்கு சற்று கீழே அமைந்திருக்க வேண்டும்.

மேலும் கணினியில் இருந்து முகம் 20-28 அங்குல தூரத்திலோ அல்லது 40 முதல் 75 செ.மீ. தூரத்திலோ இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கணினியில் தெரியும் எழுத்தைப் படிப்பதற்கு கழுத்தையோ, முதுகுப் பகுதியையோ முன்னோக்கி நீட்ட வேண்டிய அவசியமில்லாத நிலையில் அமர்ந்திருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கணினி மேஜை, நாற்காலியின் உயரமும் சரியான அளவில் அமைந்திருக்க வேண்டும்.

ஓய்வு:

தினமும் கணினி முன்னால் அமர்ந்திருப்பவர்கள் சிறிது நேரம் ஓய்வோ, இடைவேளையோ எடுத்துக்கொள்வதில் தவறில்லை.

கண்களுக்கு சோர்வு ஏற்படுவதாக உணர்ந்தால் நிச்சயம் ஓய்வு எடுத்தாக வேண்டும். 20-20-20 என்ற விதியை பின்பற்றி 20 நிமிடங்கள் வேலை பார்த்த பின்பு 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 விநாடிகள் பார்க்க வேண்டும்.

கண் சிமிட்டுதல்:

திரையில் கவனம் செலுத்தும்போது கண் சிமிட்டும் செயல்முறை தடைப்பட்டுவிடும். அதனை நினைவில் கொண்டு அடிக்கடி கண் சிமிட்ட வேண்டும். அது கண்களை ஈரப்பதமாக வைத்திருக்க துணை புரியும்.

கண்கள் உலர்வடையும் பிரச்சினையை தவிர்க்கவும் உதவும். கண்கள் உலர்ந்திருப்பதாக உணர்ந்தால் கண் டாக்டரிடம் ஆலோசனை பெற்று கண் சொட்டு மருந்தை உபயோக்கலாம்.

கண் கூசுதல்:

கணினி இருக்கும் இடத்தில் போதுமான அளவுக்கு வெளிச்சம் பரவி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்படி விளக்கு வெளிச்சம் சீராக இருந்தால் கணினி திரையில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தை குறைத்துக்கொள்ளலாம்.

கண் கூசும் அளவுக்கு கணினி திரையின் மீது விளக்கு வெளிச்சமோ, நிழலோ படக்கூடாது.

கணினி திரையில் கண்கள் கூசுவதைத் தடுக்கும் வடிப்பானை பொருத்திக்கொள்வதும் நல்லது. பணி செய்யும் இடத்தில் விளக்கு வெளிச்சம் எல்லா இடங்களிலும் சமமாக பரவி இருக்கவும் வேண்டும்.

உடல் தோரணை:

நாற்காலியில் நேராக உட்காருதல், முதுகு பகுதியை பின்நோக்கி சாய்ந்த நிலையில் வைத்தபடியே கணினியில் வேலை செய்தல், தோள்பட்டை பகுதிக்கு அழுத்தம் கொடுக்காமல் இயல்பாக வைத்திருத்தல் என உடல் தோரணையை சீராக பேண வேண்டும்.

அப்படிச் செயல்படுவது கண்களுக்கு சிரமம் ஏற்படுவதை தடுக்க உதவும்.

இதன் மூலம் கணினி விஷன் சிண்ட்ரோம் போன்ற கண் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலை, ஆன்லைன் வழியே கல்வி போன்ற நடைமுறைகள் இரண்டு ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கின்றன.

அதனால் கணினி, மடிக்கணினி, தொலைபேசி போன்ற மின்னணுத் திரைச் சாதனங்களுடன் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. அப்படி நீண்ட நேரம் மின்னணுத் திரையை பார்த்தபடி அமர்ந்திருப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

கணினி, மடிக்கணினி, அல்லது கைப்பேசி முன்பு ஒவ்வொரு நாளும் நிறைய நேரத்தை செலவிடுகிறீர்கள் என்றால், ‘கணினி விஷன் சிண்ட்ரோம்’ எனப்படும் கணினி பார்வை நோய்க்குறி (சி.வி.எஸ்) பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

நீண்ட நேரம் திரையைப் பார்க்கும்போதும், டைப்பிங் செய்யும்போதும், ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்யும்போதும் கண்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது கண் கூசுதல், கண் எரிச்சல், சோர்வு போன்ற அறிகுறிகள் வெளிப்பட தொடங்கும்.

‘‘கணினி விஷன் சிண்ட்ரோம் பெரிய அளவில் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சரியான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கண்களுக்கு பாதிப்பு நேருவதை தவிர்க்கமுடியாது.

திரையைப் பார்க்கும்போது கண்களுக்கும், கணினி சாதனங்களுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பதை உறுதி செய்வது, அரை மணி நேரத்திற்கு ஒருமுறை திரையை பார்க்காமல் சில விநாடிகள் தவிர்ப்பது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் இடையே பதினைந்து நிமிடங்கள் இடைவெளி எடுப்பது போன்ற விஷயங்களை மேற்கொள்வது நல்லது’’ என்பது கண் மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

கணினிகள் கண் பார்வை திறனை எவ்வாறு பாதிக்கின்றன என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்படும் கேள்வியாக இருக்கிறது.

கணினி முன்பு அமர்ந்திருக்கும்போது கண்களின் கவனம் முழுவதும் திரை மீதுதான் படிந்திருக்கும். அப்படி நிலையாக கவனம் குவியும்போது திரையில் பார்க்கும், செயல்படுத்தும் விஷயங்கள் எல்லாம் மூளைக்கு தகவல்களாக பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இந்த செயல்முறைக்கு கண் தசைகளின் பங்களிப்பு அதிகம் தேவைப்படும். மேலும் கண்களின் கவனம் திரையில் படர்வதன் காரணமாக கண் சிமிட்டும் செயல்முறையும் குறைந்து போய்விடும்.

திரையில் அதிக ஒளி வெளிப்படும்போது கண்கள் கூசுதல், மங்கலான பார்வை போன்ற பாதிப்புகளும் உண்டாகக்கூடும்.

கணினி விஷன் சிண்ட்ரோம் பாதிப்பு தீவிரமடைவதற்கு முன்பு சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

தலைவலி, கண்களில் அழுத்தம், கண் வறட்சி அடைதல், கண்களில் எரிச்சல், அரிப்பு ஏற்படுதல், கண்கள் சிவப்பு நிறத்திற்கு மாறுதல், கண் சோர்வு, இரட்டை பார்வை, கழுத்துவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

நன்றி: மாலை மலர்

No comments:

Post a Comment