நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 16 June 2022

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காத போது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் மூளையின் செல்கள் அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ்’ என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை - ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய் தாக்குதல் முதலியவை ஏற்படுகின்றன.

√ மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது. 
√ மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு. ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏனென்றால், இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை உள்ளன.

ஞாபகசக்திக்கு...

ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.

பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படத் தண்டுக் கீரை, கொண்டைக் கடலை முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், தயிர், சத்துள்ள உணவு வகைகளால் அதிக அளவு ஆற்றல் கிடைக்கிறது. அதனால் சோம்பேறித்தனம் நீங்கிச் சுறுசுறுப்பு அதிகமாகிறது.

மூளை சுறுசுறுப்புக்கு...

* அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளுடன் இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரீச்சம் பழம், பட்டாணி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்வதால் கோபம், பதற்றம் போன்ற உணர்ச்சிகள் மெல்ல மெல்லக் குறைந்து நரம்பு மண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

* மாதமொரு முறை கோதுமை அல்வா சாப்பிடுவதாலும், இயற்கை இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதாலும் ஞாபகச் சக்தி அதிகரிக்கிறது. சிந்தனை தெளிவும் உண்டாகிறது.

* திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, காரட், செர்ரி பழம் முதலியவை மூளை சுறுசுறுப்பாக இருக்க நல்ல உணவு வகைகளாகும். மூளையின் செயல்திறன் பாதிக்காதபடி இவை பராமரித்துப் பாதுகாக்கின்றன.

இவற்றால் நல்ல மனப்பாங்கு, எப்போதும் செயல்வேகத்துடன் இருப்பது, மனஉறுதியுடன் எதையும் எடுத்துச் செய்துமுடிப்பது ஆகிய ரசாயன விளைவுகளை இந்த உணவு வகைகள் ஏற்படுத்துகின்றன.

√ ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் அறிவாற்றலும் ஆர்வமும் சிறப்பாக இருந்தது என்கிறது வர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மனோதத்துவப் பேராசிரியர் பால்கோல்ட் என்பவர் நடத்திய ஆய்வின் முடிவு.

வெள்ளை பூண்டு...

√ மனத்தை அமைதிப்படுத்தித் தன்னம்பிக்கையை உணர்த்துகிறது வெள்ளை பூண்டு, மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

√ மீன், மீன் எண்ணெய், மீன் மாத்திரை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது  மூளையில் ஏற்படும் ஓட்டையைத் தையல்காரர் போல் சிறப்பாகத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல்படுத்துபவை மீனும், மீன் எண்ணெயும், மீன் மாத்திரையும் தான்.

மாணவர்களின் தேர்வு நேரத்தில் ஞாபகத்திறனை அதிகரிக்கும், மூளைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் உணவுகள்,

வல்லாரை...

ஞாபகசக்தியை அதிகரிக்க வேண்டும் என்றவுடனே எல்லோருடைய நினைவுக்கும் முதலில் வருவது வல்லாரை.  நினைவுத்திறனை அதிகரிக்கும் தன்மை இதற்கு இருப்பதால், வல்லாரைக்கு யோசனவல்லி  என்றும் பெயருண்டு. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு வேளை, வல்லாரையைப் பொரியலாகவோ, கூட்டாகவோ, சட்னியாகவோ செய்து பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம். வல்லாரை இலைகளை உலர்த்தி, பொடியாக்கி, வாரத்தில் மூன்று நாள்களுக்கு ஒரு வேளை, அரை டீஸ்பூன் அளவுக்குப் பாலில் கலந்து கொடுத்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். 

தேர்வு நேரத்தில் அதிகமாகக் கொடுத்தால், ஞாபகசக்தி பல மடங்கு அதிகரிக்கும் என்று தவறாக நினைத்து, வல்லாரைக்கீரையை அளவுக்கு மீறியும் பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கூடாது. இதனால், தலைசுற்றல் உண்டாகலாம்.

'வல்லாரை நெய்’ என்ற சித்த மருந்தை, (சித்த மருந்தகத்தில் கிடைக்கும்) நெய்யைப்போல உணவுகளில் பயன்படுத்தலாம். Brahmoside, Brahminoside போன்ற வேதிப்பொருள்கள் வல்லாரையில் இருப்பதால், மனதைச் சாந்தப்படுத்தும் குணம் அதற்கு உண்டு. ஆய்வுகளின் அடிப்படையில் மனச்சோர்வைப் போக்கும் தன்மையும் (Anti-depressant action) வல்லாரைக்கு இருக்கிறது.

மீன்...

தேர்வு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இருந்தாலும், கொஞ்சமாக மீன் வகைகளை உட்கொள்ளலாம். நன்றாக வறுத்த, பொரித்த மீன் உணவுகள் மட்டும் வேண்டவே வேண்டாம். மீன் குழம்பு சாப்பிடுவது சிறந்தது. 

√ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (Omega – 3 fatty acids) நிறைந்த மீன்கள், அறிவாற்றலைப் பெருக்குவதற்கு உதவும். 
√ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மூளைச் செல்களை புத்துணர்வுடன் செயல்படவைக்கும். நினைவாற்றலைப் பெருக்கவும் உதவும். 
√ அதிகமாக மீன் உணவுகளைச் சாப்பிடுபவர்களின் மூளையின் நினைவாற்றலைப் பெருக்கும் பகுதி, சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

மஞ்சள்... 

பாலில் தினமும் சிறிது மஞ்சள் தூளும், மிளகுத் தூளும் கலந்து, உங்கள் செல்லங்களுக்குப் புகட்டுங்கள். உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை நீங்கள் கவனிக்கலாம். மஞ்சளில் உள்ள குர்குமின்' (Curcumin) என்ற வேதிப்பொருள், மனச்சோர்வையும் குறைக்கிறதாம். 

மூளை ஆரோக்கியத்துக்கு...

* பிஸ்தா, பாதாம், வால்நட் போன்ற கொட்டை வகைகள் நல்லது. இவற்றில் உள்ள வைட்டமின் இ, மூளைச் செயல்பாடுகளை சிறப்பாக்கும். வால்நட்டிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் இருக்கின்றன. இது, அறிவாற்றலை அதிகப்படுத்துகிறது. 

* உருக்கிய நெய் சேர்த்துப் பிசைந்த பருப்பு சாதம், பாசத்தோடு சேர்த்து மூளைக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். 
* சிவப்பரிசி, கவுணி போன்ற பாரம்பர்ய ரகங்களைப் பயன்படுத்த முன்வாருங்கள். மாவுச்சத்தோடு சேர்த்து, பல்வேறு நுண்ணூட்டங்களையும் வாரி வழங்கும்.

* முட்டையிலுள்ள கோலைன், ஃபோலேட், வைட்டமின் பி12 போன்றவை மூளைக்கு போஷாக்கை வழங்கக்கூடியவை. ஆனால், பிராய்லர் கோழி முட்டைகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். நாட்டுக்கோழி முட்டைகளை மட்டுமே பயன்படுத்தவும். 

* கிரீன் டீயிலிருக்கும் தியனைன்’  (Theanine)  எனும் அமினோ அமிலம், ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும்.  
* கறுப்பு திராட்சை, பப்பாளி, கொய்யா, செவ்வாழை, பூசணி போன்றவற்றிலிருக்கும் ஆந்தோசயனின்களும் (Anthocyanins) மூளையின் ஆரோக்கியத்துக்கு உகந்தவை. 
மூளையை உற்சாகமாக்குவதோடு, பழங்களும் காய்களும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும். 
√ வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சுப் பழங்களை ஆசைதீரச் சாப்பிடலாம். 
√ கீரை வகைகளில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை அற்புதமான பலன்களைத் தரக்கூடியவை. கீரைகள் மனதை இதமாக்கும்; மலமிளக்கியாகவும் செயல்படும்.

சிறப்பு உணவுகளைத் தாண்டி, மூளைக்கு ஊட்டத்தைக் கொடுக்க, மூன்று வேளையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் மாவுச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து தேவையான அளவு நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்வது தான் அனைத்துக்கும் அடிப்படை.
மாணவர்களுக்கு மூளைக்குப் புத்துணர்வு அளிக்கும் உணவுகளை, தேர்வு நேரங்களில் மட்டுமல்லாமல், வழக்கமான உணவு முறையிலும் வரவேற்பது நல்லது. சிறு வயது முதலே முறையான உணவுகளைப் பின்பற்றுவதன் மூலம், முதிர்ந்த வயதில் தோன்றும் மறதி சார்ந்த நோய்களைத் தள்ளிப்போட முடியும்.
🍁 வாழ்க வளமுடன் 🍁

No comments:

Post a Comment