அரசின் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை, கற்பித்தல் பணி மேற்கொள்வது எப்படி? 

தொடக்க கல்வித்துறை சுற்றறிக்கை 

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. 

இதனை தொடக்க கல்வித்துறையின் கீழ் வரும் ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர். இடையில் இந்த வகுப்புகளை கல்வித்துறை நிர்வகிக்காமல், சமூக நலத்துறை வசம் ஒப்படைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் வந்தன. இதையடுத்து, அந்த முடிவை திரும்ப பெற்றதோடு, தொடர்ந்து கல்வித்துறையே அந்த வகுப்புகளை நிர்வகிக்கும் என அறிவித்தது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2022-23) எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு மாணவர் சேர்க்கை, கற்றல் கற்பித்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தொடக்க கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

 ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு மாணவர் சேர்க்கை ஏற்கனவே தலைமை ஆசிரியர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது அங்கன்வாடியில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகியோரின் உதவியுடன் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 3 வயது குழந்தைகள் அனைவரையும் எல்.கே.ஜி.யிலும், 4 வயதுடைய குழந்தைகளை யு.கே.ஜி.யிலும் சேர்க்க வேண்டும். தற்போது அங்கன்வாடிகளில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வரவேண்டும். இந்த குழந்தைகளுக்கு தற்போது அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்துணவு அளிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் அந்த சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post

Search here!