தினம் ஒரு தகவல் அதிகப்படியான பாராட்டு ஏற்படுத்தும் தயக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 3 July 2022

தினம் ஒரு தகவல் அதிகப்படியான பாராட்டு ஏற்படுத்தும் தயக்கம்

அதிகப்படியான பாராட்டு ஏற்படுத்தும் தயக்கம் 
ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. அந்த பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியில் பங்கேற்பவர்கள், எல்லோருமே ஏதாவது பரிசை கட்டாயம் வாங்கும் வகையில் போட்டிகளை நடத்துகிறார்கள். விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். 

இடைவிடாமல் பரிசுகளை கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலை தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய திறமையை முழுதாக காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்துவிடுகிறது, என்கிறார்கள் குழந்தைகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள். 

மேலும் அவர்கள் கூறும் போது, “பெரியவர்கள் பாராட்டும்போது குழந்தைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றனர். தங்களை திறமைசாலி, அறிவாளி என்று புகழ்வதை கேட்டு மன மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களுடைய திறமை, அறிவு குறித்த பாராட்டுகளை எல்லாம் கேட்ட பிறகு, எதிலாவது தோல்வி அல்லது சவால் ஏற்பட்டால் மனம் சோர்ந்து விடுகின்றனர். 

 சில குழந்தைகளை அழைத்து படம் வரையச்சொல்லி அவர்களை கண்காணித்தோம்.. நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாக செய்வான் என்றெல்லாம் தேவையில்லாமல் புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டுமே என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்துக்கு காரணமாக இருந்தது. ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ கலையிலோ உண்மையான திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும், முடிவு எப்படி இருக்குமோ என்று இனம்புரியாத மர்மமும் அவர்களை நன்றாக திறமைகாட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும் பரிசுகளும் அதற்கு தேவையே இல்லை. 

கலந்துகொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றத்துக்கு அங்கே என்ன இருக்கும்? குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதை போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டித்து விடக்கூடாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சிவசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமா, வெளிக் காரணம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும்” என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment