புதுமையான படிப்புகளும், வழிகாட்டுதலும்...! - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 2 July 2022

புதுமையான படிப்புகளும், வழிகாட்டுதலும்...!

‘என்ன படிக்கலாம்?' என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பலவிதமான படிப்புகளை பற்றி பகிர்ந்துக் கொள்கிறார், விஜயலட்சுமி. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவரான இவர், பிரபல பள்ளியில் தாளாளராகப் பணிபுரிபவர். 


சிறப்பு குழந்தைகளின் கல்வி நலனுக்காக பல புத்தாக்க முயற்சிகளை முன்னெடுத்துப் பாராட்டு பெற்றவர். கல்விப்பணியில் நீண்டகால அனுபவமிக்கவரான இவர், இருபாலருக்கும் ஏற்ற படிப்புகளை பற்றி விரிவாக பேசுகிறார். 

இன்றைய மாணவர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் படிப்பு எது? 

இக்கால மாணவ-மாணவிகள், ஒரு துறையின் உட்பிரிவுகளை அல்லது ஒரு பாடத்தின் கிளைப்படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிக்கவே ஆவல் கொள்கின்றனர். 
குறிப்பாக கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, நுண்ணுயிரியல், வலைப்பின்னல் (வெப் டிசைனிங்) இப்படி இன்றைய காலக்கட்டத்திற்கு தேவை நிறைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையை மட்டும் குறிவைத்து, அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் புதுப்புது படிப்புகளில் சேர்ந்து பயிலவே பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். 

 அதிகம் அறியப்படாத படிப்புகள் எவை? 

குற்றவியல், காவல்துறை நிர்வாகம் மற்றும் தடயவியல் துறை ஆகியன அதிகம் அறியப்படாத படிப்புகள். அதேசமயம் மதிப்புமிக்க படிப்புகளாகும். 

குற்றவியல் (Criminology)- காவல்துறை நிர்வாகம் (Police Administration) போன்ற படிப்புகளின் சிறப்பம்சம் குறித்து விளக்குங்கள்? 

குற்றவியல் எனப்படும் கிரிமினாலஜி என்பது சமுதாயத்தில் நடக்கும் குற்றங்கள், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வது, அது பற்றிய சமூக நிலைப்பாடு, தவறு செய்பவர்களை சீர்திருத்துவது போன்ற விஷயங்களை கற்றுத்தரும் பாடப்பிரிவு. கிரிமினாலஜி படிக்கும் பட்டதாரிகள் சி.பி.ஐ., சி.ஐ.டி. போன்ற மத்திய புலன் ஆய்வுத்துறை, மத்திய-மாநில காவல் அமைப்புகள், ரெயில்வே பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் சேர்ந்து பணியாற்றலாம். மேலும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுதவும் மிகவும் உபயோகமாக இருக்கும். 

பாரன்சீக் எனப்படும் தடயவியல் படிப்பு பற்றி விளக்குங்கள்? 

குற்றம் நடக்கும் இடத்தில் கிடைக்கும் பொருட்கள், கைரேகைகள், சிறு சிறு தடயங்களைச் சேகரித்து... அதன் மூலம் குற்ற சம்பவத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பதுதான் பாரன்சீக் துறையின் சிறப்பு. அதைதான் பாரன்சீக் படிப்பும் கற்றுக்கொடுக்கிறது. தமிழக அளவில் மாவட்டம்தோறும் பாரன்சீக் லேபரட்டரிகள் உள்ளன. 
குற்றவியல் மற்றும் காவல்துறை நிர்வாகம், தடயவியல் படிப்புகளை யாரெல்லாம் படிக்கலாம்? 

கிரிமினாலஜி ஆண்களுக்கேற்ற படிப்பு. குறிப்பாக காவல்துறையில் பணியாற்ற விரும்பும் துடிப்புள்ள மாணவர்கள் உடலோடு சேர்த்து மனதையும் ஆயுத்தப்படுத்த வேண்டும். அந்த தயாரிப்பிற்கு மற்ற படிப்புகளை விட, கிரிமினாலஜி சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல, காவல் துறையில் பணியாற்ற விரும்பும் பெண்கள் பாரன்சீக் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். ஏனெனில் இது அவர்களுக்கு மென்மையான பணி சூழலை உருவாக்கிக் கொடுக்கும். 

எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் துறை எது? 

கம்ப்யூட்டர் துறையின் வளர்ச்சி அபாரமானது. கணினி துறை மட்டுமின்றி, மருத்துவம், பொறியியல் துறையிலும் கணினியின் ஆதிக்கமே நடக்கிறது. அதனால் கம்ப்யூட்டர் மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்பங்களுமே, அடுத்த 15 ஆண்டுகளை ஆட்சி செய்யும். குறிப்பாக ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ், ரோபோ தொழில்நுட்பத்தின் எதிர்காலமும் பிரகாசமாகிறது.

பெண்களுக்கு ஏற்ற நவீன படிப்புகள் எவை? 

சமீபகாலமாக, பாராமருத்துவம் பெண்கள் மத்தியில் அதீத வரவேற்பு பெற்றிருக்கிறது. குறிப்பாக அவசர சிகிச்சைத் துறை தொழில்நுட்பம், விபத்து அவசர சிகிச்சை தொழில்நுட்பம், குருதி சுத்திகரிப்பு, நியுரோ எலக்ட்ரோ உயிரியல், அணு மருத்துவம், கண்ணியல் சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் தொழில்நுட்பம், கதிரியக்க சிகிச்சை, ஊட்டச்சத்து நிபுணர் போன்ற நவீன படிப்புகளையே பெண்கள் விரும்புகின்றனர். அதேபோல, சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் ‘ஸ்பெஷல் எஜிகேஷன்' படிப்பிற்கும், நல்ல மவுசு இருக்கிறது. 
ஒரு கல்வியாளராக மாணவர்களுக்கு உங்களது அறிவுரை? 

போட்டி நிறைந்த உலகில் நீங்கள் தனித்துவமாய் விளங்க, கூடுதல் திறமைகள் அவசியம். கல்லூரி படிப்புடன் சேர்த்து மென்திறன், ஆளுமை திறன், மொழி திறன் போன்ற கூடுதல் திறன்களையும் வளர்த்தெடுக்க வேண்டும். அதேபோல, நிறைய புத்தகங்கள் படித்து நம்முடைய படிப்பின் உள்ளார்ந்த அறிவையும் மேம்படுத்த வேண்டும். அப்போதுதான், போட்டிகளை சமாளிக்க முடியும். சவாலான சந்தர்ப்பங்களில் சாதுரியமாக வெல்லவும் முடியும்.

No comments:

Post a Comment