புறாக்களை பயிற்றுவிப்பதும், வளர்த்து பராமரிப்பதும் ஆதி காலத்திலிருந்தே புகழ்பெற்ற பொழுதுபோக்காக உலகம் முழுவதும் இருந்து வருகிறது.
முகலாயர் ஆட்சி காலத்தில் அரண்மனைகளில் புறாக்கள் தூர தேசங்களில் இருந்தும் வாங்கி வந்து வளர்க்கப்பட்டுள்ளன. புறா வளர்ப்பில் திறமை பெற்ற ஹபிப் என்பவரும் வரவழைக்கப்பட்டு உள்ளார்.
மத்திய ஆசிய பகுதியான பர்கானாவிலிருந்து அழகான சிறகுகளை கொண்ட புறாக்களை வரவழைத்து அக்பர் பராமரித்ததை, அவருடைய அரசவை கவிஞர் அபுல் பைசல் பதிவு செய்துள்ளார். பந்தயத்தில் புறாக்களை பறக்க விடுவதிலும் அக்பருக்கு ஈடுபாடு இருந்தது பற்றி ‘அக்பர் நாமா’வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபுல் பைசல் எழுதிய அயன்-ஐ-அக்பரியில், புறா பந்தயம், புறா இனவிருத்தி மற்றும் அரசவை புறாக்களின் வண்ணங்களை பற்றி குறிப்பிடுவதற்காக ஒரு முழு அத்தியாயமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்பரின் அரண்மனையில் 20 ஆயிரம் புறாக்கள் இருந்துள்ளன. அதில் 500 புறாக்கள் அழகழகான சிறப்பினங்களை சேர்ந்தவையாம்.
பேரரசர் அக்பர் தனது முகாமை மாற்றும் போதெல்லாம் புறாக்களும் கூண்டுகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், பல சிக்கலான வேலைகளை செய்ய புறாக்கள் பழக்கப்படுத்தப்பட்டு உள்ளன.
தகவல் பரிமாற்றத்துக்கும் பெரிதும் புறாக்கள் பயன்பட்டுள்ளன. சில குறிப்பிட்ட இன புறாக்களுக்கு இதற்கென்றே பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், புறா அஞ்சல் சேவை கடந்த 2002-ம் ஆண்டு வரை ஒடிசாவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பரிணாமவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின், புறா விளையாட்டுகளில் ஈடுபாடுள்ளவர். அவர் வாழ்ந்த ‘டவுன்’ என்ற கிராமத்தில் புறாக்களை இனவிருத்தி செய்யும் கூட்டை பராமரித்தார். அக்காலகட்டத்தில் இயற்கை விஞ்ஞானியும், இனவரைவியலாளருமான சர் வால்டர் எலியட்டுடன் தன் ஆய்வுக்காக டார்வின் தொடர்பு வைத்திருந்தார். புறாக்கள் குறித்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அபுல் பைசல் எழுதிய அத்தியாயம் பற்றி டார்வினுக்கு தெரிந்திருந்தது.
பல்வேறு இந்திய, பர்மியப் பறவைகளின் பதனிடப்பட்ட தோல்களை டார்வினுக்கு 1856-ல் எலியட் வழங்கியுள்ளார். டார்வின் தான் சேகரித்த புறாக்களின் எலும்புக்கூடுகளையும், பதனிடப்பட்ட தோல் சேகரிப்புகளையும் 1867-ல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு கொடையாக அளித்தார். அந்த சேகரிப்பு தற்போது இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ‘மியூசியம் டிரெஷர்ஸ்’ என்ற பிரிவில் உள்ளது.
No comments:
Post a Comment