வாய்ப்பு கிடைக்கும்போது அதை திறமையாகப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் மீனாட்சி.
வி.ஐ.பி. குடும்பத்தில் பிறந்த அவர் குடும்பத் தலைவியாக மட்டுமல்ல; துப்பாக்கி சுடும் வீராங்கனை, தொழிலதிபர், சமூக சேவை, "சல்சா' நடனம், கர்நாடக இசை பாடகி, யோகா பயிற்சியாளர் என்று பல பரிணாமங்களைக் கொண்டு விளங்குகிறார். திரைத்துறையில் இருந்துவரும் அபிராமி ராமநாதன்- நல்லம்மை ராமநாதன் தம்பதியின் மகள் மீனாட்சிதான் (47) அவர்.
இவரது கணவர் பெரியகருப்பனும் தொழிலதிபர். இரு குழந்தைகள்.
பி.இ. பட்டமும், எம்.எஸ். (நிதி) பட்டங்களைப் பெற்றவர் மீனாட்சி. இவர் தான் படிக்கும்போதே தனது தந்தை ராமநாதனிடம் இருந்து துப்பாக்கி சுடும் கலையைக் கற்றுக் கொண்டார். பின்னர், பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெற்றார்.
தேசிய, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுவருகிறார். தனது குழந்தைகளுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்துவருகிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது:
""எனது தந்தையே எனக்கு துப்பாக்கி சுடுதலில் குரு.
இளம்வயதிலேயே அவரிடமே பயிற்சி பெற்றேன். எனது தாத்தாவும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற்றவர். எனது குழந்தைகளுக்கும் நானே பயிற்சி அளித்துவருகிறேன்.
கல்லூரி மாணவியாக இருந்தபோதே, 1993-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில், பெண்கள் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று 2 பதக்கங்களை வென்றேன். பின்னர் 1994-இல் நடைபெற்ற தேசியப் போட்டியிலும் பதக்கம் வென்றேன். இப்போதும் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெறுகிறேன்.
பாட்மிட்டன், வாலிபால் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் உண்டு. இசை, நடனம், யோகா என்று பல்வேறு தனித்திறன்களைக் கொண்டுள்ளேன்.
ரோட்டரி சங்கம் வாயிலாக, 2006-ஆம் ஆண்டு முதல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறேன்.
தற்போது தி.நகர் ரோட்டரி சங்கத்தின் முதல் தலைவராகப் பதவியேற்றுள்ளேன். எனது சமூகப் பணிக்கு கணவர் பெரியகருப்பனும் உறுதுணையாக இருந்துவருகிறார்.
சுற்றுச்சூழலில் அதிக கவனத்துடன் செயல்படுவேன். கல்வி வளர்ச்சிக்கும், ஏழைகள் நலனுக்கும் பாடுபட வேண்டும் என்பதே எனது ஆவல்.
வாய்ப்பு கிடைக்கும்போது அதை திறமையாகப் பயன்படுத்த வேண்டும். எதற்கும் நேரமில்லை என்று சொல்லி நேரத்தைக் கடத்தாமல், திட்டமிட்டு பணிகளை செய்து முடிக்க வேண்டும்'' என்றார் மீனாட்சி. https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2022/jul/24/take-advantage-of-the-opportunity-3885566.html
No comments:
Post a Comment