தமிழகத்தில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் 

தமிழகத்தில் 10 ஆயிரம் ஆசிரியர்களை படிப்படியாக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். ஆலோசனை பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரியாக தேர்வாகி உள்ளவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் சமூகவலைதளங்களில் வெளிவந்துள்ளது. 

இதுகுறித்து விசாரித்து அறிக்கை தர கோரி உள்ளேன். அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் முதல்-அமைச்சரை கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். தற்போது இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 3,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. 20 நாளில் இந்தப்பணி முடிந்து விடும். 

செப்டம்பர் இறுதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு அடிப்படையில் தேவைப்படும் ஆசிரியர்கள், காலிப்பணியிடம் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். 

இந்த பணியிடத்தை படிப்படியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். டிசம்பர் மாதம் வரை ஆசிரியர்கள் நியமனத்துக்கான திட்டம் உள்ளது. மீதமுள்ள பணியிடங்களை அடுத்த 3 மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். எல்.கே.ஜி. ஆசிரியர்கள் 2,381 பள்ளிகளில் தற்போது இருக்கும் ஆசிரியர்களை கொண்டு தான் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறோம். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள பரிசீலித்து வருகிறோம். 

 தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளத்தை பொறுத்தமட்டில் முன்பை விட அதிகப்படுத்தி கொடுத்துள்ளோம். நிதி நிலைமைக்கு ஏற்றவாறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மடிக்கணினி குறித்து கணக்கெடுத்து எல்காட் நிறுவனத்துக்கு அறிக்கை அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!