குரூப்-1 தேர்வு முடிவுகளில் மிளிரும் பெண்கள் ! (தலையங்கம்) - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 10 August 2022

குரூப்-1 தேர்வு முடிவுகளில் மிளிரும் பெண்கள் ! (தலையங்கம்)

“எங்கெங்கு காணினும் சக்தியடா” என்று பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பாடல் ஒன்று உண்டு. அதுபோல, “பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா” என்று மகாகவி பாரதியார் கண்ட கனவுப்படி, பெண்கள் ஆண்களைவிட அதிகமாக தேர்வுகளில் வெற்றி பெற்று, உயர் படிப்புகளிலும், பணிகளிலும் சேருகிறார்கள். பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று எல்லோருமே பெண்கள் முன்னேற்றத்திற்காக அளப்பரிய பங்கை ஆற்றியிருக்கிறார்கள். 

குறிப்பாக, கருணாநிதி, 1989-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை தனி சட்டம் மூலம் கொண்டுவந்தார். அன்று அவர் காட்டிய பச்சை கொடிதான், இன்று எக்ஸ்பிரஸ் வேகத்தில் பெண்கள் ஏராளமாக சேர வழிவகுத்துள்ளது. 2016-ம் ஆண்டு ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டுவந்தார். இன்றைக்கு மாநகராட்சி மேயர்களில் தொடங்கி கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் வரை ஆணுக்கு நிகரான பதவி இடங்களில் பெண்கள் இருக்கிறார்கள். 

 இடஒதுக்கீடு ஒருபக்கம் இருந்தாலும், அதை ஒரு படிக்கல்லாக வைத்து பெண்கள் தங்கள் அயராத உழைப்பினால், “இலக்கை அடைந்தே தீருவேன்” என்ற முயற்சியினால், 30 சதவீத இடஒதுக்கீட்டையும் தாண்டி, மிக அதிகமான எண்ணிக்கையில் பதவிகளுக்கு வந்துவிடுகிறார்கள். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, 18 துணை கலெக்டர்கள், 19 டி.எஸ்.பி.க்கள் உள்பட 66 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு முடிவை கூறலாம். 

இதில், முதல்நிலை தேர்வை 2.5 லட்சம் பேர் எழுதியிருந்தனர். அதில் வெற்றிபெற்ற 3,800 பேர் முதன்மை தேர்வை எழுதினார்கள். இதிலும் வெற்றி பெற்ற 137 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்த நேர்முக தேர்வில் 66 பதவிகளுக்கும் தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த 66 பேரில் 57 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 86.3 சதவீதம் பேர் பெண்கள். கிடைத்த வாய்ப்பை ஒரு உந்து சக்தியாக பயன்படுத்திக்கொண்டு, லட்சியத்தை அடையும் பயணத்தில் பெண்களின் வெற்றி மிகவும் மகத்தானது. கடுமையாக உழைத்ததற்கு கிடைத்த பரிசுதான் இது. இதில் பெரும்பாலான பெண்கள் அடைந்த வெற்றியை பார்க்கும்போது, எதிர்காலத்திலும் இதே வெற்றி தொடர மற்ற பெண்களுக்கு ஒரு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற, 2 குழந்தைகளுக்கு தாயான கலைவாணியின் பேட்டி ‘தினத்தந்தி’யில் வெளிவந்தது. 

தமிழ் வழி கல்வியில் பள்ளி இறுதித்தேர்வு வரை படித்து, கல்லூரிக்கு செல்லாமல் தொலைதூர கல்வி மூலம் பட்டம் படித்து, சாதாரண தொடக்க பள்ளி ஆசிரியையாக தன் வாழ்க்கையை தொடங்கிய அந்த பெண், தன் விடாமுயற்சியினால் 14 அரசு பணிகளுக்கான தேர்வுகளில், அடுத்தடுத்து வெற்றி பெற்று, கிராம நிர்வாக அதிகாரியாக தொடங்கி பல்வேறு பணிகளில் பணியாற்றி, எனது நோக்கம் துணை கலெக்டர் ஆவதுதான் என்ற உறுதிப்பாட்டுடன், தற்போது டி.எஸ்.பி. பயிற்சியில் இருந்தாலும், முயற்சியை கைவிடாமல் இப்போது துணை கலெக்டராக தேர்வு பெற்றுள்ளார். 

சாதிப்பதற்கு வாழ்வின் எந்த நிலையும் தடையல்ல என்பதற்கு இவரே சாட்சி. கடந்த சில ஆண்டுகளாகவே குரூப்-1 தேர்வில் முதலிடம் பெறுவது பெண்களாகவே இருந்திருக்கிறார்கள். 2013-ம் ஆண்டு மதுராந்தகி, 2016-ல் சி.வித்யா, 2017-ல் எஸ்.காயத்ரி, 2019-ல் டி.இளவரசி, 2020-ல் மு.அர்ச்சனா, 2022-ல் லாவண்யா. இப்போது 18 துணை கலெக்டர் பதவிகளில் 3 பேர்தான் ஆண்கள். ஆணுக்கு நிகராக பெண்கள் உயரவேண்டும் என்ற நிலைபோய், இனி பெண்களுக்கு நிகராக ஆண்கள் உயரவேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டில் வந்துவிட்டது. பெண்களின் முன்னேற்றம் இப்போது ஆண்களுக்கு ஒரு சவாலாகிவிட்டது.

No comments:

Post a Comment