பத்திரிக்கை செய்தி பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து ஆகிறதா? அதிகாரிகள் திட்டவட்ட மறுப்பு 


பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதனை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர். பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்தா? எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 2018-ம் ஆண்டு முதல் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 
இந்த பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக கல்வித்துறை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. அதிலும் இது தொடர்பான கருத்துகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மாநில கல்வி கொள்கை குழு ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டத்திலும் ஆலோசித்ததாகவும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 
 திட்டவட்டமாக மறுப்பு ஆனால் இதுபற்றி விசாரித்தபோது, மாநில கல்வி கொள்கை குழு கூட்டத்தில், அப்படி எதுவும் ஆலோசிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது குறித்து அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம், பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்படுகிறதா என்று கேட்டபோது, அதனை திட்டவட்டமாக மறுத்தார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!