அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 10 வகையான புதிய விளையாட்டு போட்டிகள் நடப்பு கல்வியாண்டிலேயே அறிமுகம்


அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் கல்வி மட்டுமல்லாது, விளையாட்டிலும் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதற்காகவும், அதில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளை நடத்த கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டிலேயே கடற்கரை கையுந்துபந்து, குத்துச்சண்டை, சுண்டாட்டம் (கேரம்), சிலம்பம், ஜூடோ, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டா, ஸ்குவாஷ், வளையபந்து ஆகிய 10 வகையான புதிய விளையாட்டு போட்டிகளை அறிமுகம் செய்திட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதற்காக 38 மாவட்டங்களில் ஒவ்வொரு விளையாட்டு போட்டிக்கும் 2 உடற்கல்வி ஆசிரியர்கள் வீதம் 10 விளையாட்டு போட்டிகளுக்கு 760 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாநில அளவில் 30-ந்தேதி (நாளை) வரை நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளையாட்டு வீதம் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 

அதன்பின்னர், மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு இதுகுறித்த பயிற்சிகளை முறையாக வழங்கி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!