அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் சதவீதம் குறைவாக உள்ளதால், 50 முதல் 60 சதவீதம் மதிப்பெண் பெறும் வகையில் மாணவர்களின் தரத்தை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கலந்து கொண்டார். மேலும், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கார்லா உஷா கூறியதாவது:
பல பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்த போது மாணவர்கள் அடிப்படை வாசிப்பு மற்றும் எழுதும் திறன் அற்றவர்களாக இருப்பதை காண முடிந்தது.அரசுப் பொதுத் தேர்வுகளில் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களே பெறுகிறார்கள்.
எனவே மாணவர்களுக்கு சரியான பயிற்சியை வழங்கி குறைந்தபட்சம் 50 முதல் 60 சதவீதம் மதிப்பெண் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவ, மாணவியருக்கு உரிய செய்முறைத் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்க வேண்டும். தமிழ்நாடு, தேசிய அளவிலான அடைவுத் தேர்வில் பின்தங்கிய நிலையில் உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தி தரமான கல்வியை கொடுக்க வேண்டும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق