மத்திய அரசினன் ‘பி' மற்றும் ‘சி' பிரிவு போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் தமிழக மாணவர்களுக்காக 9-ந்தேதி கருத்தரங்கம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
போட்டி தேர்வு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களை பிரிவு ‘பி' மற்றும் ‘சி' பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான ‘பி' பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் ‘சி' பிரிவு பணிகள் 12-ம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு மூலம் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கருத்தரங்கம்
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பெருமளவு பங்கேற்று வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில், மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஆகியவை இணைந்து, இந்த தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுனர்களை கொண்டு, ஒரு நாள் கருத்தரங்கத்தை வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 10 மணிக்கு நடத்துகிறது.
அரசு நடத்தும் இந்த பயிற்சி முகாமில் போட்டித்தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துக்கொள்ளலாம். நேரில் வர இயலாத மாணவர்கள் பயனடையும் வகையில் இந்த நிகழ்ச்சி முழுவதுமாக இணையதளத்திலும், அரசு கேபிள் டி.வி.யிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment