அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள
4 ஆயிரம் உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை
தமிழக அரசு உத்தரவு
தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-
2012 முதல் 2017-ம் ஆண்டு வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு ஏற்பட்ட 2,331 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் தலைமையில் கடந்த ஜூலை 7-ந் தேதி நடந்த கூட்டத்தில், உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறை நீக்கப்பட வேண்டும் என்றும், 200 மதிப்பெண்ணுக்கான எழுத்து தேர்வும், 30 மதிப்பெண்ணுக்கான நேர்முக தேர்வும் நடத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 230 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலுவையில் உள்ள 7,198 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களில், இந்த ஆண்டில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்யப்பட்டது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்கள், திறந்த வெளி போட்டி எழுத்து தேர்வில் பங்கேற்கலாம் என்றும், அரசு கல்லூரியில் அவர்கள் ஆற்றிய பணியைப் பொறுத்து அவர்களுக்கு வெயிட்டேஜ் சலுகை வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங்களை போட்டி எழுத்து தேர்வு மூலம் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிடுகிறது. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கல்லூரி கல்வி இயக்குநர் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment