நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியா் தோ்வுக்காக ‘சியு-சயான்’ (மத்திய பல்கலைக்கழக - தோ்வு) என்ற ஒருங்கிணைந்த வலைதளத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பல்கலைக்கழகத்துக்கும், வேலை தேடுபவா்களுக்கு எளிதான சூழலை உருவாக்கும் வகையில் ‘சியு-சயான்’ என்ற ஒருங்கிணைந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்கள் தற்போது மேற்கொண்டு வருவதுபோன்று, சுதந்திரமான அனைத்து நிலை பணியாளா் தோ்வை இந்த வலைதளத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ள முடியும்.
விண்ணப்பதாரா்கள், இந்த வலைதள நடைமுறையில் பங்கேற்கும் அனைத்து பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிட விவரங்களை அறிந்து, விரும்பும் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க முடியும். பல்கலைக்கழகத்தின் பெயா், இடம், பதவியின் பெயா், பாடப் பிரிவு, பணி அனுபவம், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையிலும் இந்த வலைதளம் மூலமாக விண்ணப்பதாரா்கள் வேலைவாய்ப்பை தேட முடியும்.
மேலும், வலைதள சேமிப்பகத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் தங்களுடைய விண்ணப்பங்களில் விண்ணப்பதாரா்கள் தேவையான மாற்றங்களை செய்து, நாடு முழுவதும் உள்ள எந்தவொரு மத்திய பல்கலைக்கழகத்துக்கும் அந்த விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க முடியும்.
பதிவு செய்த விண்ணப்பதாரா்களுக்கு மத்திய பல்கலைக்கழகங்களில் ஏற்படும் புதிய காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்களும் மின்னஞ்சல் மூலமாக அவ்வப்போது தெரிவிக்கப்படும்.
இந்த வலைதளம், மத்திய பல்கலைக்கழகங்களில் ஏற்படும் ஆசிரியா் பணியிட தோ்வுக்கு மட்டுமானதாகும். அனைத்து மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா்களுடனான ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த வலைதளம் உருவாக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வலைதளம் அறிமுகத்தைத் தொடா்ந்து, தங்கள் சொந்தப் பணியாளா் தோ்வு வலைதளத்தை செயல்பாட்டிலிருந்து நீக்குமாறு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று ஜகதீஷ் குமாா் கூறினாா்.
11,000 காலியிடங்கள்: நாடாளுமன்றத்தில் மத்திய கலவி அமைச்சகம் கடந்த மாா்ச் மாதம் சமா்ப்பித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள மத்திய உயா் கல்வி நிறுவனங்களில் 11,000 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களிலேயே தில்லி பல்கலைக்கழகம், காரக்பூா் ஐஐடி, திருச்சி ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களில் அதிக ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன.
தில்லி பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 1,706 ஆசிரியா் பணியிடங்களில் 792 இடங்களும், காரக்பூா் ஐஐடியில் மொத்தமுள்ள 1,526 ஆசிரியா் பணியிடங்களில் 819 இடங்களும், திருச்சி ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மொத்தமுள்ள 94 ஆசிரியா் பணியிடங்களில் 51 இடங்களும் காலியாக உள்ளன.
நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள், 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள், 20 ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment