தனியாருக்கு நிகராக டிஜிட்டல் மயத்துக்கு அரசு பள்ளிகளை உயர்த்தும் வகையில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகளுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வாங்க பள்ளிக்கல்வித்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
கையடக்க கணினி
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முன் முயற்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சி வழங்குவது, தொழில்நுட்பம் வாயிலாக மாணவ-மாணவிகளுக்கான கற்றல் பணிகளுக்கு வித்திடும் வகையில் செயல் திட்டங்களை உருவாக்குவது போன்ற பல முயற்சிகள் பாராட்டப்படுகின்றன. இந்த தொடர் முயற்சியில் மேலும் ஒரு மகுடமாக தொடக்கக்கல்வித்துறை சார்ந்த பள்ளிகளில் கற்பித்தல் பணிகளுக்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கையாள உள்ளனர்.
அதன்படி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் 79 ஆயிரத்து 723 பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்பட இருக்கிறது. அவ்வாறு வழங்கப்படும் டேப்லெட்டை வாங்குவதற்கு ஏதுவாக ஒப்பந்தப்புள்ளியை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நிறுவனங்களிடம் கோரியுள்ளது.
டிஜிட்டல் மயம்
இதற்கு முன்பு வரை ‘எல்காட்' நிறுவனம் வாயிலாக தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் வாங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெளி நிறுவனங்கள் மூலம் டேப்லெட் வாங்கப்பட இருக்கிறது.
இந்த டேப்லெட்டில் பாடநூல்கள் மற்றும் அதுசார்ந்த வீடியோக்கள், மாணவ-மாணவிகளுக்கு எளிதாக புரியவைக்கும் வகையில் பாடம் சார்ந்த படங்கள் ஆகியவையும் அதில் இடம்பெறச்செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கற்றல், கற்பித்தல் பணிகள் தொடர்பான புள்ளி விவரங்களையும் அதில் பதிவு செய்வதற்கு ஏதுவாகவும் ஏற்பாடு செய்யபட உள்ளதாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக டிஜிட்டல் மயத்துக்கு அரசு பள்ளிகள் மாறுவது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால் இவை அனைத்தும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது கல்வியாளர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.
No comments:
Post a Comment