பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வி வெளியிட்டுள்ள, பி.டி.ஏ., வினா வங்கி புத்தகம், பாட நுால் விற்பனை செய்யும் கடைகளில் விற்கப்பட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பி.டி.ஏ., சார்பில், கணித தீர்வு புத்தகம் மற்றும் வினா வங்கி புத்தகம் விற்கப்படும்.
இந்த புத்தகத்தில் குறைந்தபட்சம், 5 ஆண்டுகளுக்கான, அரசு தேர்வுத்துறையின் பொதுத் தேர்வு, துணைத் தேர்வு ஆகியவற்றுக்கான வினாக்கள் இடம் பெறும். மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராகும் வகையில், இந்த புத்தகம் விற்கப்படுகிறது.
கடந்த, 2018ல், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்ததால், வினா வங்கி வெளியிடுவது நிறுத்தப்பட்டது. தற்போது பாடத்திட்டம் வெளியாகி, ஐந்து ஆண்டுகளை தாண்டிய நிலையில், மீண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பாடநுால் கழக புத்தக கட்டடத்தின், தரை தளத்தில், சிறப்பு விற்பனை பிரிவில் விற்கப்படுகிறது. இதுதவிர, மாவட்டந்தோறும் ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அங்கு விற்கப்படுகிறது.
ஆனால், ஒரு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்ந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட பள்ளியை தேடி சென்று, வினா வங்கி புத்தகம் வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே, பி.டி.ஏ., வினா வங்கி புத்தகங்களை, பாடநுால்கள் விற்பனை செய்யும் கடைகளில் விற்க அனுமதிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment