மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான
‘நீட்’ தேர்வு மையங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ‘நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்' நுழைவுத்தேர்வு வருகிற மே 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை நடைபெற்றது. தேர்வுக்கு, 23 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளார்கள். தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வு மையங்கள் தொடர்பாக, மாணவர்களின் இறுதி நேர பதற்றங்களை தவிர்க்கும் வகையில், தேர்வு மையம் அமையும் நகரம் குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வுகள் முகமை முன்கூட்டியே வெளியிடும். அந்த வகையில், நடப்பாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ள தேர்வு மையம், இடம், நகரம் குறித்த விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதன் விவரங்களை, www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவேற்றம் செய்து அறியலாம்.
தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. தேர்வு தொடர்பாக சந்தேகம் இருப்பின் 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment