கல்வியை பொறுத்தவரை இந்தியாவைவிட, உலக நாடுகளில் ஏராளமான துறைகளில் படிப்பு கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதனால்தான் வெளிநாட்டு கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் முன்னேறிய நாடுகளில் நிலைமையே வேறு. அவர்களுக்கு உலகம் பெரிது. ஆனால் எல்லா படிப்புகளையும் வெளிநாட்டில் படிப்பது, சிறந்த முடிவாக இருக்காது. காரணம், இந்தியாவில் கல்வி பயில்வதை விட, வெளிநாட்டில் கல்வி பயில்வது மிகவும் செலவு மிகுந்த ஒன்று. அதனால் இந்தியாவில் இல்லாத இளங்கலை படிப்புகளை மட்டும் வெளிநாட்டில் தேர்வு செய்து படிப்பது நல்லது. அது கூடுதல் மதிப்பையும், நல்ல வேலைவாய்ப்பையும் உருவாக்கி கொடுக்கும். குறிப்பாக, பொறியியல், மருத்துவம்... என்பதை தாண்டி சாகசம், விளையாட்டு, திறன் வெளிப்பாடு மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல வித்தியாசமான படிப்புகளை மேற்கொள்ள, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அணுகலாம். வழக்கமான படிப்புகளிலிருந்து வேறுபட்ட, தங்களுக்கு உண்மையில் விருப்பம் உள்ள துறையில் தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் உகந்ததாக அமையலாம். அவ்வாறு மாணவர்கள் வெளிநாடு சென்று நடனம், மலையேறுதல், படகோட்டுதல், சாகச சுற்றுலா உள்ளிட்ட பலவித படிப்புகளை மேற்கொண்டு இந்தியா திரும்பி, இதுதொடர்பான பள்ளிகளை தொடங்கலாம். வெளிநாட்டில் அவர்கள் பெறும் வித்தியாசமான அனுபவங்கள் அவர்களின் உலகை விரியச் செய்கிறது. கனடாவின் ப்ரேசர்வேலி பல்கலைக்கழகம் சாகச சுற்றுலா படிப்புகளை வைத்துள்ள கல்வி நிறுவனங்களில் முக்கியமானது. மேலும், ஆஸ்திரேலியாவிலும், விளையாட்டு தொடர்பான பல இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் உள்ளன. உடற்பயிற்சி மறுவாழ்வு அறிவியல் (Exercise Rehabilitation science), உடற்பயிற்சி உடலியல் (Exercise physiology), விளையாட்டு உடலியல் (Sports psychology), பயோமெக்கானிக்ஸ் (Biomechanics) போன்ற பல படிப்புகள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன. இத்தகைய படிப்புகளை வழங்குவதில், கனடா, ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகளைப் போல், நியூசிலாந்தும் புகழ்பெற்று விளங்குகிறது. வெளிநாட்டிற்கு பறக்கும் இந்திய மாணவர்கள், வாழ்வின் பல புதிய அனுபவங்களை அங்கே உணர்கின்றனர். அந்த அனுபவங்களை இந்தியாவில் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். இதன்மூலம் ஒரு புதிய கலாசார இணைவு ஏற்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், ஒயின் தயாரித்தல் போன்ற படிப்பையும் மேற்கொள்ளலாம். இப்படிப்பில், பட்டங்கள் மற்றும் டிப்ளமோக்களும் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, Gaming management எனப்படும் விளையாட்டு மேலாண்மை படிப்பும் வழங்கப்படுகிறது. வெறும் ஹாஸ்பிடாலிடி (விருந்தோம்பல்) மேலாண்மை என்றளவில் உள்நாட்டில் ஒரு பட்டத்தைப் பெறுவதை விட, உள் அரங்க விளையாட்டு மேலாண்மையுடன் சேர்த்து, அந்தப் பட்டத்தை வெளிநாட்டில் பெறும்போது, அதன் மவுசு மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Search here!