விளையாட்டு வீரர்களுக்கான உணவுப்படி ரூ.350 ஆக அதிகரிப்பு
வெற்றியாளர் நிதி உதவி ரூ.4 லட்சமாக உயர்வு
சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி பெறும் 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் பணி ஆணை வழங்கப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் 37 விளையாட்டு விடுதிகளில் தங்கும் வீரர்களின் எண்ணிக்கை 2,330-ல் இருந்து 2,600 ஆக உயர்த்தப்படும். மேலும் உணவுப்படி நாள் ஒன்றுக்கு ரூ.250-ல் இருந்து ரூ.350 ஆகவும், சீருடை மானிய தொகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் ஆகவும், உபகரண மானியத்தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கான மானியம் ஒலிம்பிக் போட்டிக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாகவும், ஒலிம்பிக் அல்லாத போட்டிகளுக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
இளைஞர்கள் நல்லொழுக்கத்துடன் சமூகத்திற்கு உயரிய பங்களிப்பினை அளிக்க புதிய இளைஞர் கொள்கை அறிமுகம் செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் உருவாக்கப்படும். உள் மற்றும் வெளி விளையாட்டரங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
தேசிய படை மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.14 லட்சத்தில் இருந்து ரூ.28 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
தலைசிறந்த 10 விளையாட்டு வீரர்கள், ஒப்பந்த அடிப்படையில் நிபுணத்துவ பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அறிவியல் பூர்வமாக மென்பொருள் மூலமாக மதிப்பிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
No comments:
Post a Comment