அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ ஐ சி டி இ) ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும், மாணவர் சேர்க்கையை எப்போது முடிக்க வேண்டும்? முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை எப்போது தொடங்க வேண்டும்? என்பது போன்ற அட்டவணையை வெளியிடும்.
அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கான கல்வியாண்டு அட்டவணையை ஏ.ஐ.சி.டி.இ. வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் ஜூன்30-ம் தேதிக்குள் அங்கீகாரம் பெற்றுவிடவேண்டும். அதேபோல், பல்கலைக்கழகங்கள், வாரியங்களிடம் இருந்து இணைப்பு அந்தஸ்தை அடுத்த மாதம் (ஜூலை) 31-ம் தேதிக்குள் பெற வேண்டும். மாணவர் சேர்க்கையில் இடம் கிடைத்தவர்கள் அதில் சேர விருப்பம் இல்லாமல் போனால், செப்டம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் ரத்து செய்யவேண்டும். அவ்வாறு செய்யும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித் தரவேண்டும்.
அதேபோல், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் உள்ள காலி இடங்களை நிரப்பி, வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டும். மேலும் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையையும் அதே தேதிக்குள் முடித்து வகுப்புகளை ஆரம்பிக்கவேண்டும்.
அதுமட்டுமல்லாமல், முதுநிலை மேலாண்மை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகளும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும்.
திறந்தநிலை மற்றும் இணையவழி படிப்புகளுக்கு யு.ஜி.சி. வழிமுறைகளை பின்பற்றி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் செயல்பட வேண்டும் எனவும்ஏ ஐ சி டி இ தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு முடிந்தநிலையில், கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. ஏ ஐ சி டி இ அறிவுறுத்தலின்படி, கலந்தாய்வை வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் முடித்து, முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும்.
No comments:
Post a Comment