பள்ளி சார்ந்த செயல்பாடுகளை கண்காணிக்க
3,806 ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிர்ணயம்
கல்வித்துறை தகவல்
பள்ளி வசதி, எண்ணும் எழுத்தும், பள்ளி செல்லா குழந்தைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள், உயர்கல்வி வழிகாட்டுதல்கள், அனைத்து உண்டு உறைவிடப் பள்ளிகள், மாதிரி பள்ளிகள் மற்றும் பிற உட்கூறுகள் அடங்கிய பள்ளி சார்ந்த செயல்பாடுகளை மாநில திட்ட இயக்கக்கத்தில் இருந்து கண்காணிக்க கடினமாக இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு தெரிவித்து இருந்தார்.
அதனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அரசிடம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி சார்ந்த செயல்பாடுகளை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில திட்ட இயக்ககத்தில் பணிபுரிய 10 மாநில ஒருங்கிணைப்பாளர்களையும், ஒரு மாவட்டத்துக்கு 7 ஆசிரியர் பயிற்றுனர்கள் வீதம் 266 பேர், உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்படும் 20 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் என 20 பேர் என 286 பேர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் நிர்ணயம் செய்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் அரசாணை பிறப்பித்துள்ளார்.
மேலும் 414 ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 510 குறுவள மையங்களில் ஒரு மையத்துக்கு ஒரு ஆசிரியர் பயிற்றுனர் வீதம் 3,510 பேரையும் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலர் பணியிடங்களில் பணிபுரியும் 59 பணியாளர்களை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும் தாய்த் துறைக்கு அனுப்பி வைக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட இயக்குனருக்கு இந்த அரசாணை மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment