ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க 8-ந் தேதி கடைசி நாள் கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 8-ந் தேதி கடைசி நாளாகும். 
காலிப்பணியிடங்கள் கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 18 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதேபோல் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 88 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. 

தொகுப்பூதிய முறை இந்த பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி, வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த தற்காலிக பணி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், அவர்கள் பணி நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2025 வரை மட்டும் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பம் எனவே வேலை தேடுவோர் இது தொடர்பான கூடுதல் விவரங்களை கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய கல்வித் தகுதிச்சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கடலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண் 310-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 8-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!