என்ஜினீயரிங் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது. மேலும் கலந்தாய்வு குறித்த அட்டவணையும் வெளியாகிறது.
என்ஜினீயரிங் படிப்பு
2024-25-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ம்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஜூன்) 6-ம்தேதியுடன் நிறைவு பெற்றது. பின்னர், மேலும் அவகாசம் கேட்டு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கடந்த மாதம் 10 மற்றும் 11-ம்தேதிகளில் விண்ணப்பப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்ததாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்தது.விண்ணப்பப் பதிவு செய்தவர்களில், 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், அவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்து இருந்தனர்.
தரவரிசைப் பட்டியல்
இந்த நிலையில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண்ணும் கடந்த மாதம் 12-ம்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13-ம்தேதி முதல் 30-ம்தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி, விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது தள்ளிப்போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அட்டவணைப்படி, என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் கலந்தாய்வு குறித்த அட்டவணையும் வெளியாக இருக்கிறது.
No comments:
Post a Comment