என்ஜினீயரிங் கல்லூரி படிப்புக்கான கட்டணத்தில் நடப்பு கல்வியாண்டில் எந்தவித மாற்றமும் கிடையாது, கடந்த ஆண்டை போலவே வசூலிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


என்ஜினீயரிங் கலந்தாய்வு

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கான 2024-25-ம் கல்வியாண்டு கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கும். 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த, ‘நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம்' காரணமாக என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் காரணமாக என்ஜினீயரிங் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதுவும், என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பங்கள் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும். அதேபோல், 7.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக, கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர். முதல்-அமைச்சர் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அதிகம் முக்கியத்துவம் வழங்குகிறார். நாட்டிலேயே தமிழகத்தில்தான் 52 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்பவர்களாக உள்ளனர். இதுவே, தி.மு.க. அரசின் சாதனை. 

மாற்றம் இருக்காது

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நடைபெறும். 7.5 சதவீத இடஒதுக்கீடு சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு, சிறப்பு பிரிவு கலந்தாய்வு, பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு கலந்தாய்வு ஆகியவை தொடர்ச்சியாக நடைபெறும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற செப்டம்பர் மாதம் 11-ந் தேதி நிறைவடையும். கலந்தாய்வு நிறைவுக்கு பிறகும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தால், அந்த கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும். என்ஜினீயரிங் கல்லூரி கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இருப்பினும், சென்ற ஆண்டை போலவே என்ஜினீயரிங் கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படும். 

மாற்றம் இருக்காது. 

கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வரும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது கோர்ட்டில் வழக்குகள் உள்ளபோதே, கவர்னர் ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளார். இதற்கு, கவர்னர்தான் பதில் கூறவேண்டும். என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள், மருத்துவப்படிப்பில் சேர்ந்தால் அவர்களின் கல்வி கட்டணத்தை கல்வி நிறுவனங்கள் முழுமையாக திருப்பி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!